ராகுல், பிரியங்கா தேர்தல் 'டூர் பிளான்' அறிவிப்பிலும் சர்ச்சை; தமிழக காங்கிரசில் தொடரும் புகைச்சல்
ராகுல், பிரியங்கா தேர்தல் 'டூர் பிளான்' அறிவிப்பிலும் சர்ச்சை; தமிழக காங்கிரசில் தொடரும் புகைச்சல்
ADDED : டிச 15, 2025 06:28 AM

மதுரை: தமிழக காங்கிரசில் மரபு மீறி தொகுதி பங்கீடு பேசுவதற்கான ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்ற சர்ச்சைக்கு முடிவதற்குள் காங்., எம்.பி.,க்கள் ராகுல், பிரியங்காவின் தமிழக சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யும் குழுக்கள் நியமனம் மீதும் சர்ச்சை எழுந்துள்ளது. இது கட்சியின் சீனியர் தலைவர்களை அதிர்ச்சியுற வைத்துள்ளது.
மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுகள், மாற்றங்கள், அறிவிப்புகள் எதுவானாலும் அகில இந்திய காங்., தலைமை தான் அறிவிப்பது வழக்கம். அறிவிப்புகளில் காங்., தேசிய பொதுச் செயலாளர் கையெழுத்து இடம் பெறும். ஆனால் சமீபத்தில் தி.மு.க., உடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கான தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவை மாநில காங்கிரசே அறிவித்தது.
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சனநாச்சியப்பன், தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கான குழு தமிழகத்தில் இனிமேல் தான் அமைக்கப்படும். தி.மு.க., சார்பில் அதிகாரப்பூர்வ குழுவை அறிவித்த பின் காங்., குழு விபரத்தை தேசிய பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிடுவார் என்றார். இது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அடுத்த மாதம் தேர்தல் சுற்றுப்பயணமாக தமிழகத்தில் ராகுல் பங்கேற்கும் கிராமக் கமிட்டி மாநாடு, பிரியங்கா பங்கேற்கும் மகளிர் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் குழுக்கள் விபரங்களை மாநில காங்., வெளியிட்டுள்ளது. இதிலும் தேசிய பொதுச் செயலாளரான வேணுகோபால் கையெழுத்து இல்லாததால் மரபு மீறப்பட்டுள்ளது என சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழக காங்., நிர்வாகிகள் கூறியதாவது: இதுவரை சோனியா, ராகுல், பிரியங்காவின் தேர்தல் சுற்றுப்பயண ஏற்பாடுகளை கவனிக்கும் குழுக்களை அகில இந்திய காங்., தலைமையின் தேசிய பொதுச் செயலாளரே அறிவித்து வந்தார். ஆனால் சமீபத்தில் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளதாக தமிழக காங்., தலைவரே அறிவிப்புகளை வெளியிடுகிறார். இது மரபு மீறலான செயல்பாடு.
கார்கே உடன் தமிழக தலைவருக்கு உள்ள நெருக்கத்தால் தமிழகத்தில் மட்டும் இதுபோன்ற உள்குத்து அரசியல் நடக்கிறதா. பிற மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை. தமிழகத்தில் மட்டும் தான் மரபு மீறிய அறிவிப்பு வெளியாக தொடங்கியுள்ளன. சட்டசபை தேர்தல் நேரத்தில் இதுபோன்ற தேவையில்லாத சர்ச்சை ஏற்பட வழி வகுக்க கூடாது. அகில இந்திய தலைமை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றனர்.

