போலீஸ் பற்றாக்குறையால் திண்டாடும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு
போலீஸ் பற்றாக்குறையால் திண்டாடும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு
UPDATED : ஜன 09, 2024 03:14 AM
ADDED : ஜன 09, 2024 01:10 AM

சென்னை: கடத்தல் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வெறும், 30 பேருடன் சென்னை மண்டல மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்படுவதாக போலீசார் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
ஒடிசா மற்றும் ஆந்திராவில் இருந்தும், தமிழகத்தில், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், இலங்கைக்கு போதை பொருள் கடத்தல் அதிகளவில் நடக்கிறது.
இதை தடுக்க, திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கத்தில் சென்னை மண்டல மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம், பிரமாண்ட கட்டடத்தில் செயல்படுகிறது. அங்கு குறைந்த அளவே பணியாளர்கள் உள்ளனர். பெரும்பாலான அறைகள் காலியாகவே உள்ளன.
இலங்கை, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல்களைச் சேர்ந்தோர் அட்டூழியம் செய்து வருகின்றனர். தமிழகத்தை போதை பொருள் கடத்தலுக்கான நுழைவு வாயில் போல பயன்படுத்தி வருகின்றனர்.
அதை தடுக்க வேண்டிய போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, குற்றத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:
தற்போது, டி.ஐ.ஜி., பதவி உயர்வு பெற்றுள்ள அரவிந்தன் தான், சென்னை மண்டல இயக்குனராக உள்ளார். துடிப்பு மிக்க இளைஞர். சென்னை தி.நகர் துணை கமிஷனர், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., யாக பணிபுரிந்து உள்ளார்.
மனித சக்தியுடன், அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன் குற்றங்களை குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுபவர். அவரின் வேகத்திற்கு ஈடாக செயல்பட, மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் போதிய போலீசார் இல்லை. வெறும், 30 பேர் மட்டுமே உள்ளோம்.
கடத்தல் கும்பலை கண்காணிப்பது எளிதல்ல. பணிச்சுமை அதிகம் உள்ளது. இதை போக்க, குறைந்த பட்சம், 300 போலீசாரையாவது நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.