UPDATED : அக் 18, 2026 04:05 AM
ADDED : அக் 18, 2026 03:58 AM

தம்பதியின் 'ரீல்ஸ்' மோகம்: வலைதளங்களில் விமர்சனம்
சவுரவ் ஜோஷி என்ற யூ டியூபரும், அவரது குடும்பத்தினரும் வீட்டில் அமர்ந்து விளையாடுகின்றனர். ஆட்டத்தில் தோற்றுப்போன மனைவியிடம், தான் சொல்வதை செய்ய வேண்டும் என்று கூறிய சவுரவ், 'நாய்க்கு தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் நீயும் தண்ணீர் குடிக்க வேண்டும்' என்று கூறுகிறார்.
அதை கேட்டதும் முகம் சுளித்த மனைவி அவந்திகா, கணவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் ஒரு வாய் குடிக்கிறார். அவர்கள் வலைதளங்களில் வெளியிட்ட இந்த வீடியோ, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 'ரீல்ஸ் மோகத்தில் இப்படியெல்லாம் செய்யக்கூடாது' என்றும், 'சுகாதாரக்கேடான விஷயம்' என்றும் வலைதளவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர். 'முன்கூட்டியே திட்டமிட்டு செய்வதாக இருந்தால்கூட, இப்படி ஒரு கேவலமான விஷயத்தை செய்யும்படி கூறலாமா' என்று சிலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
கற்பனையை கிளறிய பறக்கும் கார்: இணையத்தில் கொண்டாட்டம்
வலைதளவாசிகளின் கற்பனைக்கு வேட்டையாக அமைந்து விட்டது, டெஸ்லாவின் பறக்கும் கார் அறிமுகம். இணையத்தில் 'மீம்' படங்களும், வீடியோக்களும் குவிந்து வருகின்றன. சாலை விதி மீறிய பறக்கும் கார் டிரைவருடன், போக்குவரத்து போலீசார் தங்கள் வாகனத்தில் ஏணி வைத்து ஏறி நின்று பேசுவதை சித்தரிக்கிறது ஒரு மீம். கம்பங்களில் இருந்து வீடுகளுக்கு செல்லும் ஒயர், கேபிள்களில் பறக்கும் கார் மாட்டிக்கொண்டு தொங்கும் காட்சி, குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.
உயரமான கட்டடம் ஒன்றில் செங்குத்தாக பறக்கும் கார் ஏறுவது போன்றும், போலீஸ் ஸ்டேஷன் முன் பறக்கும் கார், 360 டிகிரிக்கு சுற்றுவதை போலீஸ்காரர் ஒருவர் அதிர்ச்சியில் பார்ப்பது போலவும், சுடச்சுட மீம் வீடியோக்கள் வந்திருக்கின்றன. அந்தரத்தில் நிற்கும் பறக்கும் காரில் டயரை கழற்றி மாட்டுகிறார், மெக்கானிக் ஒருவர். கொள்ளையடித்து விட்டு சாலையில் காரில் செல்லும் திருடன், வழிமறித்து நிற்கும் போலீசாரை கண்டதும் காருடன் பறக்கத் தொடங்குவது போன்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
திக்கற்றவர்க்கு தெய்வம் துணை
ரயில் சென்று கொண்டிருக்கிறது. இருக்கையில் அமர்ந்திருக்கும் முதியவரின் உடையும், கோலமும் அவரது பரிதாப நிலையை வெளிக்காட்டுகின்றன. எதிர் இருக்கையில் துணிப்பை சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. அந்த பையில் அச்சிடப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி சுவாமி படத்தை பார்த்து கை கூப்பியபடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார், அந்த முதியவர். இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோ, காண்பவர் பலரையும் உருக வைத்திருக்கிறது. 'கடவுளே அவரது வேண்டுதலை நிறைவேற்று' என்கின்றனர், பலர். 'திக்கற்றவர்க்கு தெய்வம் துணை' என்ற வலை தளவாசி ஒருவரின் கமென்ட்டை ஏராளமானோர் ஆமோதிக்கின்றனர்.
'தாண்டியா' முடிந்து விட்டதால்: பார்சல் திரும்ப வருவதாக புகார்
ஆ ன்லைனில் பொருள் வாங்குவதில் ஒரு வசதி இருக்கிறது. வாங்கி பார்த்து பிடிக்கவில்லை என்றால் திருப்பி அனுப்பி விடலாம். இதை தவறாக பயன்படுத்துவோரும் இருக்கின்றனர். நவராத்திரிக்காக துணி ஆர்டர் செய்த பலர், ஒரு சில நாட்களிலேயே அவற்றை திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்திருக்கிறது.
துணி பார்சல்கள், 'ரிட்டர்ன்' அனுப்புவதற்காக டெலிவரி ஏஜென்டிடம் குவிந்து கிடக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. 'தாண்டியா முடிந்து விட்டது. ஆடை திருப்பித் தரப்பட்டு விட்டது. என்ன ஒரு வெட்கமற்ற தலைமுறை' என்ற தலைப்பிலான வீடியோ வலைதளங்களில், கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது.
'வியாபாரிகளை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இப்படி செய்கின்றனர்' என்றும், 'ரிட்டர்ன் செய்வதாக இருந்தால் 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்ற விதியே இவர்களால் தான் வந்திருக்கும்' என்றும், கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
எங்கப்பா சந்தோஷப்படுவார்: 99 வயது மூதாட்டி உற்சாகம்
பி ரிட்டனின் குளோசெஸ்டர்சயரை சேர்ந்த மூதாட்டி ஹெல்கா டபிக்கு, 'விங் வாக்' செய்ய ஆசை. 'விங் வாக்' என்பது, விமானத்தின் இறக்கையின் மீது நின்றபடி பயணிப்பது. இதற்கென சிறிய ரக விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. விமான இறக்கையின் மீது அவர் நின்று கொள்ள, அவரை பெல்ட் கொண்டு பிணைத்து விட்டனர்.
காற்றில் கைகளை விரித்தபடி தன் சாதனை பயணத்தை அனுபவித்தார் ஹெல்கா. 'விங் வாக் செய்த அதிக வயது கொண்டவர்' என்ற கின்னஸ் சாதனை சான்று அவருக்கு கிடைத்தது. அவரது பயணத்தால், நலப்பணிகளுக்கு 1.64 லட்சம் ரூபாய் நிதியும் கிடைத்தது. 'எங்கப்பா இருந்தால் ரொம்ப பெருமைப்படுவார்' என்கிறார், 99 வயது ஹெல்கா.
