எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு எதிரான குற்றங்கள் மூன்று ஆண்டுகளில் 68 சதவீதம் அதிகரிப்பு
எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு எதிரான குற்றங்கள் மூன்று ஆண்டுகளில் 68 சதவீதம் அதிகரிப்பு
UPDATED : அக் 16, 2025 01:18 AM
ADDED : அக் 16, 2025 01:16 AM

தமிழகத்தில் எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2019ல் 1,175 குற்ற வழக்குகள் பதிவான நிலையில், 2023ல் 1,969 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், ஜாதி ரீதியான பாகுபாட்டை களைய, அரசு 'சமத்துவபுரம், 'சமத்துவ மயானம்' உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியது.
இச்சமூக மக்கள் ஜாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படுவதை தடுக்க, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. ஆனாலும், எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு எதிரான குற்றங்கள், ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.
காவல் துறையில் பதிவான வழக்குகளின் படி, கடந்த 2019ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது, எஸ்.சி, - எஸ்.டி., மக்களுக்கு எதிரான குற்றங்கள் 1,175ஆக இருந்தது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில், இக்குற்றங்கள் 68 சதவீதம் அதிகரித்துள்ளன. அதாவது, எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள், தாக்குதல், ஜாதி ரீதியான புறக்கணிப்பு, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள், 2023ல் 1,969ஆக உயர்ந்துள்ளது.
இது தவிர, 6,500க்கும் மேற்பட்ட வழக்குகள், ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளன. குற்றங்கள் அதிகரித்து வருவது, சமூக ஆர்வலர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, மதுரையை சேர்ந்த, சமூக ஆர்வலர் கார்த்திக் கூறியதாவது:
வன்கொடுமை சட்டத்தை, தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்த, முதல்வர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. வழக்குகளின் நிலை, பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் நிவாரணம், மறுவாழ்வு குறித்து ஆய்வு செய்வது, இக்கமிட்டியின் நோக்கம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டிய கமிட்டி, கடந்த நான்கு ஆண்டில், மூன்று முறை மட்டுமே கூடியுள்ளது.
மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையிலான கமிட்டி; ஏ.டி.ஜி.பி., தலைமையிலான,'சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கமிட்டி' ஆகியவை செயல்பாடின்றி உள்ளன. இதுவே, எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணம்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை, எஸ்.சி., - எஸ்.டி., வழக்கு பதிவில், 514 வழக்குகளுடன் மதுரை முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, தமிழகத்தில், 394 கிராமங்களில் வன்கொடுமை தடுப்பு சட்டம் கடைப்பிடிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் சேலம், கரூர், துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், சில இடங்களில், தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில், எஸ்.சி., - எஸ்.டி., மக்கள் பொதுவழிப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் மோத்தக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில், இறந்தவர்களின் உடல்களை பொது வழியில் எடுத்துச் செல்லவும், பட்டியலின மக்கள் பொதுப் பாதையில் நடக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதை எதிர்த்து கேட்டால், மாற்று சமூகத்தினர் தாக்குகின்றனர். இது போன்ற சம்பவங்கள், தி.மு.க., ஆட்சியில் அதிகரித்துள்ளன. அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தால் மட்டுமே, இத்தகைய பாகுபாடுகள் குறையும். - - கருப்பையா, தலித் விடுதலை இயக்கம்.
- நமது நிருபர் -