கோவில்களுக்கு நிதி ஒதுக்காத அறநிலைய துறையால் நெருக்கடி
கோவில்களுக்கு நிதி ஒதுக்காத அறநிலைய துறையால் நெருக்கடி
ADDED : டிச 05, 2024 02:20 AM

ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், பசலி ஆண்டு எனும் ஜூலை - ஜூன் வரை 12 மாதங்களுக்கு நிர்வாக செலவு, பூஜை உள்ளிட்ட செலவுகள் கணக்கிடப்படுகின்றன.
ஆண்டுதோறும் அறநிலையத்துறை தனித்தனியே குறிப்பிட்ட தொகையை, இதற்காக ஒதுக்கி செலவு செய்ய அனுமதிக்கும். அதை கணக்கிட்டு கோவில் செயல் அதிகாரிகள் செலவு செய்து வந்தனர்.இந்தாண்டு ஜூனில், அறநிலையத்துறை ஓராண்டிற்கான நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால், ஆறு மாதங்களாகியும் ஒதுக்காததால், 48 பெரிய கோவில்களில் தினமும் பூஜை, நிர்வாக செலவுகளுக்கு, 'குத்துமதிப்பாக' செலவு செய்யப்படுகிறது.
சில கோவில்களில் மின் கட்டணம் செலுத்துவதில்கூட குளறுபடி நீடிக்கிறது. சிறிய கோவில்களில் வழக்கமாக பூஜை பொருட்கள் தருவோரிடம், கடன் சொல்லி செலவு செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
பெரிய கோவில்களில் பூஜை, நிர்வாக செலவுகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இணை, துணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கோவில் நிதியை பயன்படுத்தி வருகின்றனர்.
உடனடியாக பட்ஜெட் தயாரித்து கோவில்களுக்கு அறநிலையத்துறை நிதி ஒதுக்க முன்வர வேண்டும். இதன் வாயிலாக தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிதிக்குள் அதிகாரிகள் செலவு செய்ய வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் -