ADDED : அக் 21, 2024 03:57 AM

புதுடில்லி: டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. முதல்வராக இருந்த ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப் பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அவர் காலி செய்தார். இதையடுத்து, அந்த இல்லத்தில் புதிய முதல்வர் ஆதிஷி குடிபெயர்ந்தார்.
தன்னை சாதாரண நபராகக் காட்டிக்கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பல ஆடம்பர வசதிகள் செய்திருப்பதாக, எதிர்க்கட்சியான பா.ஜ., துவக்கம் முதலே குற்றஞ்சாட்டி வருகிறது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை அரவிந்த் கெஜ்ரிவால் காலி செய்துவிட்ட நிலையில், இல்லத்தை புதுப்பிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள், அதற்கான செலவுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மொத்த பரப்பளவு 21,000 சதுர அடி. புதுப்பித்தல் பணியின்போது, மோட்டார் வாயிலாக இயக்கப்படும் ஜன்னல் திரைச்சீலைகள், 4 - -6 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 64 லட்சம் ரூபாய் செலவில், 16 அதிநவீன தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டன.
இது தவிர, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சாய்தள சோபாக்கள், 19.5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் எல்.இ.டி., விளக்குகள், 9 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன சமையலறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளுக்காக, 15 கோடி ரூபாயும்; அலங்கார துாண்களுக்காக, 36 லட்சம் ரூபாயும்; கழிப்பறை இருக்கைகளுக்கு, 10 முதல் 12 லட்சம் ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ளன.
'டில்லி மக்களின் வரிப்பணத்தை அரவிந்த் கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மியும் தவறாக பயன்படுத்தி உள்ளது' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு பதிலளித்த முதல்வர் ஆதிஷி, ''இந்த கேவலமான அரசியலை பற்றி கவலைப்பட மாட்டோம்,'' என்றார்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில், டில்லியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சொகுசு பங்களா விவகாரம் ஆம் ஆத்மிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

