'ஆன்லைன்' வாயிலாக தினமும் பிரசாரம்; கூட்ட நெரிசலை தவிர்க்க விஜய் வியூகம்
'ஆன்லைன்' வாயிலாக தினமும் பிரசாரம்; கூட்ட நெரிசலை தவிர்க்க விஜய் வியூகம்
ADDED : ஏப் 03, 2026 05:16 AM

சென்னை: கூட்ட நெரிசலை தவிர்க்க, 'ஆன்லைன்' வாயிலாக பிரசாரம் செய்ய, த.வெ.க., தலைவர் விஜய் வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க., சார்பில், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அக்கட்சித் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
கடும் நெரிசல்
பெரம்பூர் தொகுதியில் மனு தாக்கல் செய்துவிட்டு, கொளத்துார் தொகுதியில் பிரசாரத்திற்கு சென்றபோது, கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், விஜய்க்கும், அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, தன் பிரசாரத்தை விஜய் ரத்து செய்தார். நேற்று திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட, அவர் மனு தாக்கல் செய்தார். அங்கும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர்; கால் வைப்பதற்கு கூட இடமில்லாத அளவிற்கு நெரிசல் ஏற்பட்டது.
இருந்தபோதும், மாநிலம் முழுதும் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டு இருந்தார். ஆனால், கூட்ட நெரிசலால் அசம்பாவிதம் ஏற்படுவதை விஜய் விரும்பவில்லை. இதனால், ஆன்லைன் பிரசாரத்திற்கு மாற, விஜய் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது: விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்து பார்க்க வேண்டும் என குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்டோருக்கு, கட்சி தலைமை பலமுறை அறிவுறுத்தி உள்ளது.
20 நிமிடங்கள்
ஆனால், அதை பொருட்படுத்தாமல், விஜய் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூடுகின்றனர். இதனால், உயிர் இழப்பு அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க விஜய் நினைக்கிறார். அதனால், ஆன்லைன் வாயிலாக பிரசாரத்தை முன்னெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தினமும் 20 நிமிடங்கள் வரை ஆன்லைனில் பேச அவர் விரும்புகிறார்.
இப்படி செய்வதால், ஓரிடத்தில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். இப்படி விஜய் ஆன்லைனில் பேசுவதை, த.வெ.க., பிரசாரக் கூட்டங்களில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
