ADDED : மார் 10, 2024 01:14 AM

சர்வதேச போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தலை மறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
'கடத்தல் தொழில் வாயிலாக சாதிக் சம்பாதித்த பணம் எப்படி, யார் யாருக்கு கொடுக்கப்பட்டது. பயங்கரவாத செயல்களுக்கும் இந்த பணம் செலவிடப்பட்டதா' என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது.
அரசியல்வாதிகள், சினிமா புள்ளிகள் என பலர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளதால், இந்த விசாரணையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டிருப்பதால், தோவலே நேரடியாக களம் இறங்கி விட்டாராம்.
விசாரணையில் என்ன தகவல் கிடைத்துள்ளது; எந்த அளவிற்கு முன்னேற்றம் போன்ற பல விஷயங்கள் அறிக்கையாக தோவலுக்கு அனுப்பப்பட்டு வருகிறதாம்; மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விசாரணையை கண்காணிக்கிறாராம்.
'தமிழகத்தில் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர், போதை பொருள் கடத்தல் தொடர்பாகவும் பேசினார். இதிலிருந்து, இந்த விவகாரத்திற்கு மத்திய அரசும், மோடியும் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், இந்த விவகாரத்தில் நேரடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகரே இறங்கிஉள்ளார்' எனவும் சொல்லப்படுகிறது.

