டில்லி உஷ்ஷ்ஷ்: களத்தில் இறங்கிய பிரசாந்த் கிஷோர்
டில்லி உஷ்ஷ்ஷ்: களத்தில் இறங்கிய பிரசாந்த் கிஷோர்
ADDED : அக் 06, 2024 01:59 AM

புதுடில்லி: பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்தவர், பீஹாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர். 2021 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் ஆலோசகராக இருந்து, தி.மு.க.,வை வெற்றிபெறச் செய்தவர். பல கோஷங்களை, தி.மு.க., எழுப்ப ஆலோசனை அளித்தவர்.
மஹாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்., 2ல், 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவக்கினார். இவருடைய கட்சியின் கொடியில் காந்தியும், அம்பேத்கரும் இடம் பெற்றுள்ளனர். 'எங்கள் கட்சி இடது பக்கமோ, வலது பக்கமோ போகாது.; மனிதாபிமான பாதை தான் எங்கள் நோக்கம்' என்கிறார் கிஷோர். பீஹாரின் அனைத்து பகுதிகளிலிருந்தும், 50,000 பேர் இவர் கட்சி ஆரம்பித்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
'பீஹாரை, இந்தியாவின் 'நம்பர் 1' மாநிலமாக ஆக்குவேன். ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்திலேயே மதுவிலக்கை ரத்து செய்து அனைவருக்கும் சாராயம் கிடைக்குமாறு வழி செய்வேன்' என, தன் கொள்கையை அறிவித்துள்ளார் கிஷோர். பீஹாரில், தற்போது மதுவிலக்கு அமலில் உள்ளது.
அத்துடன், 'அமெரிக்காவைப் போல யார் கட்சியின் வேட்பாளர்கள் என்பதை மக்களே தேர்ந்தெடுப்பர். கட்சி தலைவராக இருப்பவரின் பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே; அனைத்து ஜாதியினருக்கும் கட்சி தலைவராக வாய்ப்பு வழங்கப்படும்' என, இதுபோன்ற பல அதிரடி அறிவிப்புகளையும் கட்சி துவக்கிய அன்றே வெளியிட்டு உள்ளார்.
'இந்த கட்சி, பா.ஜ.,வின் பி டீம்' என, பீஹாரின் மற்ற கட்சிகள் வர்ணித்தாலும், உள்ளுக்குள் பயந்து போயுள்ளன. காரணம், கட்சி துவக்குவதற்கு முன்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பீஹாரின், 6,000 கிராமங்களுக்கு சென்று, மக்களை சந்தித்துள்ளார் பிரசாந்த். எனவே, இவருக்கு மக்களின், 'பல்ஸ்' தெரியும். பீஹார் சட்டசபை தேர்தலில், இவருடைய கட்சி நிச்சயம் ஒரு பலமான கட்சியாக உருவாகும்' என, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.