டில்லி 'உஷ்ஷ்ஷ்!'; கும்பமேளாவை நடத்தும் பெங்களூர்காரர்!
டில்லி 'உஷ்ஷ்ஷ்!'; கும்பமேளாவை நடத்தும் பெங்களூர்காரர்!
UPDATED : ஜன 19, 2025 12:07 PM
ADDED : ஜன 19, 2025 05:07 AM

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரத்தில், மஹா கும்ப மேளா அமர்க்களமாக நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி செல்கின்றனர்.
ஆயிரக்கணக்கான சாதுக்கள், கோடிக்கணக்கில் பக்தர்கள் என, பெரிய கூட்டம் அலைமோதும் இந்த மஹா கும்பமேளா, பாதுகாப்புடன், எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற வேண்டும். இந்த ஏற்பாடுகளை கவனிப்பவர், விஜய் கிரன் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. பெங்களூர்காரரான இவர், 2009 பேட்ச் உ.பி., கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி.
அத்துடன் இவர், ஒரு சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்டும் கூட. உ.பி.,யின் பல பகுதிகளில் கலெக்டராகவும், வேறு பல பதவிகளிலும் இருந்துள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான, கோரக்பூரில் பணியாற்றியபோது, மோடி கையால் பிரதமர் விருது வாங்கியவர்.
ஒவ்வொரு ஆண்டும், திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் மஹா கும்பமேளாவை, 2017 மற்றும் 2019ல் நிர்வகித்தவர் விஜய் கிரன். இப்படி கும்பமேளாவை நடத்துவதில் திறமையானவர் என்பதால், 2025 மஹா கும்பமேளா அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பக்தர்களை தங்க வைக்க கூடாரம், பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், போக்குவரத்து வசதி, அதே சமயம் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் வசதிகள் என, அனைத்து விஷயங்களிலும் திட்டம் தீட்டி, இதுவரை அமைதியாக மஹா கும்பமேளாவை நிர்வகித்து வருகிறார் விஜய் கிரன்.