ADDED : டிச 29, 2024 03:41 AM

வரும் வாரம் ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. 'புத்தாண்டு எப்படியிருக்கும்' என, பல ஜோதிடர்கள் ராசி, நட்சத்திரம் என்று, விரிவாக பத்திரிகைகளில் எழுதுவதுடன், சமூக வலைதளங்களிலும் சொல்லி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு 2025 எப்படி இருக்கும் என, ஜோதிட ரீதியாக பார்க்காமல், அரசியல் ரீதியாக பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாநிலத்திலாவது சட்டசபை தேர்தல் நடந்தபடியே இருக்கும்; இதனால் மோடி பிசியாக இருப்பார். ஆனால், 2025ல் இரண்டு மாநில சட்டசபை தேர்தல் மட்டுமே நடைபெற உள்ளன. அதில் ஒன்று டில்லி; இது முழு சட்டசபை கிடையாது. பிப்ரவரி மாதம் டில்லிக்கு தேர்தல் நடைபெறும்.
அடுத்ததாக, நவம்பரில் பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெறும். இதனால், 2025ல் மோடிக்கு தேர்தல் நெருக்கடி கிடையாது; ஆனால், வெளிநாடு தொடர்பான நிறைய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் அடங்கிய அமைப்பு, 'குவாட்' என, அழைக்கப்படுகிறது. இந்த குவாட் உச்சி மாநாடு, 2025 செப்டம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இதில் அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலிய பிரதமர், ஜப்பான் பிரதமர் ஆகியோர் பங்கேற்பர். இது ஒரு முக்கியமான மாநாடு. அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதன் முறையாக இந்தியா வருவார், டொனால்டு டிரம்ப். இதற்கான ஏற்பாடுகளில் படு பிசியாகி விடுவார் மோடி.
இதற்கு முன்னதாக பல வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் மோடி. ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது; மேலும் பல தலைவர்கள் இந்தியா வர உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் பங்கேற்க, வெளிநாடு அதிபர்களை அழைப்பது வழக்கம். இந்த முறை குடியரசு தின விருந்தினராக, இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ இந்தியா வருகிறார். இந்தியா- - இந்தோனேஷியா நட்பு குறித்து பேச்சு நடைபெறும். 1950ல் முதல் குடியரசு தின விழாவிலும், அப்போதைய இந்தோனேஷிய அதிபர் சுகர்னோ பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ரீதியாக மோடி பிசியாக இல்லாவிட்டாலும், வெளிநாட்டு விவகாரங்களில் 2025ல் படு பிசியாக இருப்பார் மோடி.

