ADDED : ஆக 04, 2024 03:01 AM

புதுடில்லி: 'நாட்டின் அரசியலமைப்பை பா.ஜ., மாற்ற முயற்சிக்கிறது' என்கிற கோஷத்துடன், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டது, 'இண்டியா' கூட்டணி. பார்லிமென்டிலும் இது குறித்து ராகுல் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பேசி வருகின்றனர்.
இதை எதிர்கொள்ள, பா.ஜ.,விற்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா கொண்டு வந்த எமர்ஜென்சி குறித்து, பா.ஜ.,வினர் எதிர்வாதம் வைத்தனர். உடனே ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், 'எமர்ஜென்சி காலத்தில் நடந்த அட்டூழியங்கள் குறித்து விசாரித்த, ஷா கமிஷனின் அறிக்கையை சபையில் சமர்ப்பிக்கலாமே' என, யோசனை கூறினார்.
கடந்த, 1975ல் எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார் இந்திரா. தி.மு.க., தலைவர்கள் உட்பட அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் சிறை சென்றனர்; பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது.
ஜனதா கட்சி, 1977ல் ஆட்சி அமைத்தவுடன், எமர்ஜென்சியின் போது நடந்த அராஜகங்களை ஆராய, முன்னாள் தலைமை நீதிபதி ஜெ.சி. ஷா தலைமையில் கமிஷனை அமைத்தது, மொரார்ஜி தலைமையிலான ஜனதாஅரசு.
கடந்த, 1978ல் 500 பக்கங்களுக்கும் மேலான தன் அறிக்கையை சமர்ப்பித்தார் ஷா. போலீஸ் அராஜகம், எதிர்க்கட்சி தலைவர்கள் கைது, சஞ்சயின் அத்துமீறல்கள் என, பல விஷயங்கள் இந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தன.
இதை அமல்படுத்த, சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க ஜனதா அரசு முயற்சித்தது; ஆனால், உட்கட்சி பிரச்னையால் மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்தது. பின், 1980ல் மீண்டும் பிரதமரான இந்திரா, ஷா கமிஷன் அறிக்கையை குப்பையில் துாக்கி வீசினார்.
இப்போது இந்த அறிக்கையை பார்லிமென்டில் தாக்கல் செய்ய, பா.ஜ., அரசு தயாராகி வருகிறது. இது முழுதும் வெளியானால், காங்., கூட்டணி கட்சிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்படும். காரணம், இந்த கூட்டணி கட்சி தலைவர்கள், இந்திராவால் சிறைக்கு அனுப்பப்பட்டனர்; அத்துடன், காங்கிரஸ் எப்படி நம் அரசியலமைப்பை நிலை குலைய வைத்தது என்பதும் தெரிய வரும்.