ADDED : நவ 24, 2024 01:18 AM

புதுடில்லி: இந்திய அரசியலையும், தொழிலதிபர்களையும் கலங்கடித்துக் கொண்டிக்கும் விவகாரம், அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்.
'அதானி, 'கிரீன் எனர்ஜி' அதானி குழுமத்தின் ஒரு நிறுவனம். 'இந்திய மாநிலங்கள் மின்சாரம் வாங்க, சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேலாக லஞ்சம் கொடுத்துள்ளது இந்த நிறுவனம்' என்பது குற்றச்சாட்டு. இந்திய நிறுவனம் லஞ்சம் கொடுத்தால் அமெரிக்கா எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?
இந்த நிறுவனத்தில், அமெரிக்க குடிமகன்களின் பங்குகள் உள்ளன. அமெரிக்க மக்களின் பணத்தை லஞ்சமாக கொடுப்பது அந்நாட்டின் சட்டப்படி குற்றம்.
அதே சமயம், நீதிமன்றத்தின் குற்றப் பத்திரிகையில், 'இதெல்லாம் குற்றச்சாட்டுகள். இவை நிரூபிக்கப்படும் வரை அதானி நிரபராதி' எனவும் சொல்லியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளது அதானி குழுமம்.
இந்த விவகாரம் குறித்து டில்லி அரசியல் மற்றும் அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுவது இதுதான். 'நம் ஊர் அரசியல் மாதிரி, ஆட்சி மாறுவதற்கு முன் இந்தியாவை ஒரு வழியாக்க அதிபர் பைடன் முடிவு செய்துவிட்டார். அத்துடன், புதிய அதிபர் டிரம்புக்கு தலைவலி ஏற்படுத்தவும் முடிவு செய்து, அதானி விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் பைடன்.
'டிரம்ப் பதவி ஏற்றவுடனேயே இப்போதுள்ள அரசின் தலைமை வழக்கறிஞர் மாற்றப்படுவார். எனவே, அதற்கு முன் இதை செய்துவிட வேண்டும் என, பைடன் செய்தது தான் அதானி விவகாரம். அத்துடன், மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்பட இது உதவும் என்பது, அமெரிக்க உளவு நிறுவனங்களின் நோக்கம்.
'தவிர, பார்லிமென்ட் கூட்டத்தொடர் துவங்கும் முன்பாக இப்படி ஒரு அதிரடியை இறக்கிவிடுவது கூட, அமெரிக்காவின் நோக்கமாக இருக்கும். முன்பு, இதே அதானிக்கு எதிராக ஹிண்டர்பர்க் அறிக்கை பார்லிமென்ட் தொடருக்கு முன்பாக வெளியிடப்பட்டது' என்கின்றனர் அதிகாரிகள்.