ADDED : செப் 29, 2024 12:36 AM

மும்பை: வரும் நவம்பர் மாதத்தில், மஹாராஷ்டிர மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது; விரைவில், இதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தற்போது, பா.ஜ., கூட்டணி ஆட்சியில் உள்ளது. சிவசேனா கட்சியின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். 288 தொகுதிகளைக் கொண்ட இங்கு, முதன்முறையாக ஆறு கட்சிகள் போட்டியிடுகின்றன; அவை இரண்டு சிவசேனா, இரண்டு தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்., - பா.ஜ.,
லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி அதிக, 'சீட்'களை வென்றது.
இதனால், 'எப்படியாவது பா.ஜ., கூட்டணியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி விடுவோம்' என, நம்பிக்கையோடு உள்ளனர், எதிர்க்கட்சி தலைவர்கள். 'பா.ஜ., 160 தொகுதிகளில் போட்டியிடும்; மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும்' என, சொல்லப்படுகிறது.
ஜார்க்கண்ட் கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், தற்போது மஹாராஷ்டிர கவர்னராக உள்ளார். மூன்றுமுறை பிரதமர் மோடியை சந்தித்து விட்டார் இவர்; என்ன பேசினர் என்பது யாருக்குமே தெரியாது. 'ராதாகிருஷ்ணன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் மோடி. அதனால்தான், மிகவும் முக்கிய மாநிலமான மஹாராஷ்டிராவின் கவர்னராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்' என்கின்றனர், விஷயம் தெரிந்தவர்கள்.
தேர்தல் முடிந்து, யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை எனில், 'யார் ஆட்சி அமைப்பது?' எனும்போது, கவர்னரின், 'பவர்' முக்கியத்துவம் பெறுகிறது. மஹாராஷ்டிராவில் கவர்னராக இருந்த கோஷ்யாரி, அவசர அவசரமாக பா.ஜ.வைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிசை முதல்வராக பதவி ஏற்க வைத்தார்; ஆனால், அடுத்த, 80 மணி நேரத்திலேயே பட்னவிஸ் அரசு கவிழ்ந்தது.
ஆனால், 'ராதாகிருஷ்ணன் அரசியல் சாசன சட்டப்படிதான் நடப்பார். எது எப்படியோ... அடுத்த மஹாராஷ்டிர அரசை நிர்ணயிப்பது ஒரு தமிழர்' என்கின்றனர் பா.ஜ.,வினர்.