ADDED : அக் 27, 2024 01:23 AM

மும்பை: சரத் சந்திர கோவிந்தராவ் பவார் என்கிற சரத் பவாருக்கு வயது, 83. மஹாராஷ்டிரா முதல்வர், மத்திய அமைச்சர் என பல பதவிகள் வகித்தவர். முதலில் காங்கிரசில் இருந்தவர், அக்கட்சியில் இருந்து வெளியே வந்து, தேசியவாத காங்கிரஸ் என, தனிக் கட்சி ஆரம்பித்தார்.
இவருக்கு பல உடல்நல பிரச்னைகள் இருந்தாலும், தீவிர அரசியலிலிருந்து விலகாமல் ஒரு கை பார்த்து வருகிறார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, பா.ஜ.,விற்கு எதிராக நிற்க வைப்பதில் கில்லாடியாக இருக்கிறார். இதற்கு உதாரணம், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.
மஹாராஷ்டிராவில், அடுத்த மாதம் 20ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பல பிரச்னைகள் உள்ளன.
'எங்களுக்கு, 100 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்காவிட்டால், 288 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்' என, காங்கிரசை உத்தவ் மிரட்டினார். 'என்ன செய்வது' என தெரியாமல் குழம்பிய ராகுல், சரத் பவாரை அணுகினார். மஹாராஷ்டிரா மாநில காங்., தலைவர், உத்தவ் தாக்கரே என பலரையும் அழைத்து, 'ஒன்றாக இருந்தால் தான் பா.ஜ., கூட்டணி அரசை வீழ்த்த முடியும்' என, கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தினார்.
அத்துடன் நில்லாமல், இவரே ஒரு பார்முலாவை தயார் செய்தார். காங்., சிவசேனா, தேசியவாத காங்., என அனைத்திற்கும் தலா 85 தொகுதிகள் என, தன் திட்டத்தை கூறினார்; இதற்கு அனைவரும் சம்மதித்தனர். 'இதை கூட்டினால், 255 தொகுதிகள் தான் வருகின்றன. மொத்தம் 288ல் மீதமுள்ள தொகுதிகளில் சமாஜ்வாதி, இடதுசாரிகள் என, 15 தொகுதிகளை ஒதுக்குவோம்; மற்ற தொகுதிகளில் யார் போட்டியிடுவர் என்பதை விரைவில் முடிவு செய்வோம்' என, சமாதானப்படுத்தி உள்ளாராம் பவார்.
'இண்டி' கூட்டணியில் தொகுதி பங்கீடு பிரச்னை வரும் என ஆவலுடன் காத்திருந்த பா.ஜ.,விற்கு, 'ஷாக்' கொடுத்துள்ளார் பவார்.