டில்லி உஷ்ஷ்ஷ்: சந்தேஷ்காலியால் மம்தாவுக்கு நெருக்கடி
டில்லி உஷ்ஷ்ஷ்: சந்தேஷ்காலியால் மம்தாவுக்கு நெருக்கடி
ADDED : பிப் 25, 2024 12:06 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு ஊர் தான், சந்தேஷ்காலி. இப்போது படு பிரபலமாகி நாடு முழுக்க செய்திகளில் அடுபடும் ஊராகி விட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜகான் ஷேக். இவர், இந்த ஊரில் பலருடைய நிலங்களை ஆக்கிரமித்து விட்டார்.
அத்துடன், பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது; பல மகளிர் சங்கங்கள் இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
'பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாத பெண் முதல்வர் மம்தா' என, பா.ஜ.,வும் கடுமையாக விமர்சித்து வருகிறது. ஜன., 5ல் ஷாஜகானின் வீட்டை அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு செய்த போது, இவருடைய ஆதரவாளர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கினர்.
'இது பா.ஜ., - -ஆர்.எஸ்.எஸ்.,சின் சதி' என, பதிலுக்கு குற்றம் சாட்டுகிறார் மம்தா. பஷிர்ஹட் லோக்சபா தொகுதியில் வருகிறது இந்த சந்தேஷ்காலி. இந்த தொகுதி, ஆளுங்கட்சி வசம் உள்ளது. இங்கு எம்.பி.,யாக இருப்பவர் நுஸ்ரத் ஜஹான். இங்கு, சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகம்; எனவே அவர்களுக்கு எதிராக மம்தா பேச மறுக்கிறார்.
மார்ச் முதல் வாரத்தில், பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பா.ஜ., மகளிர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இருக்கிறார். அப்போது சந்தேஷ்காலி விவகாரம் குறித்து கடுமையாக விமர்சிக்க உள்ளாராம். 'இந்த விவகாரத்தை பா.ஜ., பெரிதுபடுத்துவதற்கு முன், மீண்டும் 'இண்டியா' கூட்டணியில் சேர்ந்தால் எதிர்ப்பை சமாளிக்கலாம்' என, மம்தா திட்டமிட்டுள்ளாராம். காங்கிரசுடன் கூட்டணி வேண்டாம் என்றவர், இப்போது எதிர்க்கட்சி கூட்டணியுடன் தொகுதி பங்கீட்டில்ஈடுபட்டுள்ளாராம்.

