ADDED : பிப் 16, 2025 12:18 AM

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு பிடிக்காத பதவி என்றால், அது லோக்சபா துணை சபாநாயகர் பதவிதான். 2019ல் மோடி இரண்டாவது முறையாக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதும், துணை சபாநாயகர் பதவி யாருக்குமே வழங்கப்படவில்லை. 2024ல் மீண்டும் மோடி பிரதமரானார்; இப்போதும் துணை சபாநாயகர் பதவி காலியாகவே உள்ளது.
சபாநாயகர் பதவி, ஆட்சி நடத்தும் கட்சிக்கு போகும். எனவே துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சியினருக்கு வழங்குவது வழக்கம். ஆனால் மோடியோ, 'துணை சபாநாயகர் பதவி இருந்தால்தான் பார்லிமென்ட் நடக்குமா? அந்த பதவி காலியாகவே இருக்கட்டும்' என, சொல்லிவிட்டாராம். அப்படி என்ன இந்த பதவி மேல் மோடிக்கு வெறுப்பு? 2014ல் முதன்முறையாக, மோடி பிரதமரான போது, அ.தி.மு.க.,வின் தம்பிதுரை துணை சபாநாயகர் ஆனார்.
பொதுவாக, துணை சபாநாயகர் பதவியில் இருப்பவர், பார்லிமென்டில் அரசுக்கு எதிராக பேசுவதோ, கேள்வி கேட்பதோ வழக்கம் கிடையாது. ஆனால், 'தம்பிதுரை அரசுக்கு எதிராக பேசுகிறார், கேள்வி கேட்கிறார்' என, அப்போது சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜன், மோடியிடம் புகார் அளித்தாராம்; இதனால், 2019ல் எவருமே இந்த பதவியில் அமர்த்தப்படவில்லை.
'இப்போதும் இந்த பதவி காலியாகத்தான் இருக்கிறது. பார்லிமென்ட் மரபை மோடி மீறுகிறார்; எதிர்க்கட்சிகளுக்கு இந்த பதவி கிடைக்க வேண்டும்' என, எதிரணியினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர்; ஆனால், பிரதமர் தான் பிடிவாதமாக உள்ளார்.
காரணம் என்னவெனில், காங்கிரசுக்கு இந்த பதவியைக் கொடுக்க மோடிக்கு விருப்பமில்லை. ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு கொடுத்தால், கூட்டணியில் அங்கம் வகிக்கும், சந்திரபாபு நாயுடுவிற்கு பிடிக்காது. சமாஜ்வாதி கட்சிக்கு கொடுத்தால் காங்கிரசுக்கு பிடிக்காது. எனவே, இந்த பதவி காலியாகவே இருக்கட்டும் என, முடிவு செய்துவிட்டார்.
சபாநாயகர் இல்லாதபோது, சபையை நடத்த எம்.பி.,க்கள் அடங்கிய குழு ஒன்று உள்ளது; அந்த குழுவில் உள்ளோர் தான், சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து, சபையை நடத்தி வருகின்றனர்.