ADDED : நவ 10, 2024 01:00 AM

புதுடில்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு, அனைத்து உலகத் தலைவர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தாலும், முதலில் டிரம்புடன் போனில் பேசி வாழ்த்து சொன்னது பிரதமர் மோடி என்கின்றது டில்லி அதிகாரிகள் வட்டாரம்.
இதற்கான ஏற்பாடுகளை செய்தது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். அமைச்சராவதற்கு முன், 2013 இறுதியிலிருந்து 2015 ஜனவரி வரை இந்திய துாதராக அமெரிக்காவில் பணியாற்றினார், ஜெய்சங்கர்; பின், வெளியுறவுத்துறை செயலராக பணிபுரிந்தார். இதனால், அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இவருக்கு நல்ல தொடர்பு உண்டு.
இவரோடு இன்னொரு அதிகாரியும் மோடிக்கு உதவியுள்ளார். அவர், பர்வதானேனி ஹரிஷ். தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர். இப்போது, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார்.
பல நாடுகளில் இந்தியாவின் துாதராக பணிபுரிந்தவர். இவருக்கும், அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் நல்ல மதிப்பும், தொடர்பும் உண்டு. இவரும், ஜெய்சங்கரும் இணைந்து முயற்சி மேற்கொண்டனர். இதன் விளைவாக மோடி, டிரம்புடன் தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தாராம்.