ADDED : செப் 22, 2024 01:29 AM

புதுடில்லி: மத்திய அமைச்சர்களிடையே அதிகமாக விவாதிக்கப்படும் விஷயம், பிரதமரின் எச்சரிக்கை பேச்சு. 'அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் என்ன செய்யக் கூடாது, எப்படி நடந்து கொள்ள வேண்டும்' என, மூன்று விஷயங்களை கட்டளைகளாக கூறினாராம், பிரதமர் மோடி.
இந்த எச்சரிக்கை பட்டியலில் முதல் விஷயம், 'சிறப்பு விமானங்களை உங்கள் பயணத்திற்கு பயன்படுத்த வேண்டாம்; இது, உங்களை பொதுமக்களிடமிருந்து விலக்கி விடும்; அத்துடன், அரசு பணமும் வீணாகும்.
இரண்டாவது, '-தேவையில்லாமல் யாருடனும் பேச வேண்டாம்; அப்படியே பேசினால், உங்கள் பேச்சை யாராவது, 'ரெகார்ட்' செய்கின்றனரா... 'வீடியோ' எடுக்கின்றனரா என்பதை கவனியுங்கள். யு டியூபர்கள், கையில் பணம் கொடுப்பது போல வீடியோ எடுத்து, பங்காரு லக்ஷ்மணன் போல உங்களை சிக்க வைப்பர்; 'பி கேர்புல்' என்றாராம்.
மூன்றாவது-, 'யாரையும் நம்ப வேண்டாம். நம் அரசை வீழ்த்த வெளிநாட்டு சதி மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் பல சக்திகள் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கின்றன. பிரதமர் அலுவலகம் மற்றும் பா.ஜ., தலைமை அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிடுமாறு தகவல் வந்தால் மட்டுமே, அதை செய்யுங்கள்; உங்கள் அமைச்சகம் குறித்து தேவையில்லாத செய்திகளை வெளியிடாதீர்கள்...' எனவும் கூறி வருகிறாராம் மோடி.