பதவி விலகிய ஜக்தீப் தன்கர் பங்களா ராசி இல்லை என்கிறார்!
பதவி விலகிய ஜக்தீப் தன்கர் பங்களா ராசி இல்லை என்கிறார்!
UPDATED : ஜூலை 27, 2025 08:31 AM
ADDED : ஜூலை 27, 2025 01:37 AM

புதுடில்லி: டில்லியில் புதிய பார்லிமென்ட் கட்டடம், 2023 மே மாதம் திறந்து வைக்கப்பட்டு, செப்டம்பர் 2023லிருந்து பார்லிமென்ட் கூட்டத்தொடர், புதிய கட்டடத்தில் நடந்து வருகிறது. பிரதமர், துணை ஜனாதிபதி ஆகியோருக்கு புதிய வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
அத்துடன், மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும், பார்லிமென்டிற்கு அருகிலேயே புதிதாக கட்டப்பட்டு, முடிவடையும் நிலையில் உள்ளன. விரைவில், மத்திய அரசின் அலுவலகங்கள் இந்த புதிய கட்டடங்களுக்கு இடம் மாறும்; இந்த கட்டடங்கள் உள்ள பகுதி அனைத்தும், 'சென்ட்ரல் விஸ்டா' என, அழைக்கப்படுகிறது.
இந்த சென்ட்ரல் விஸ்டாவில் தான், துணை ஜனாதிபதியின் பங்களா உள்ளது. பார்லிமென்டிற்கு அருகிலேயே உள்ள இந்த பங்களாவில், சில மாதங்களுக்கு முன் ஜக்தீப் தன்கர் குடி பெயர்ந்தார். அவர் போன நேரம் சரியில்லையோ என்னமோ தெரியவில்லை; பல பிரச்னைகள் ஆரம்பித்தன.
மத்திய அரசுக்கும், அவருக்கும் நிலைமை சரியில்லாமல் போனது. தன்கரும், தன்னை சந்திக்கும் வி.ஐ.பி.,க் களி டம் சகட்டு மேனிக்கு, மோடியை விமர்ச னம் செய்துள்ளார். இதெல்லாம், அவர் புது பங்களாவிற்கு சென்ற பின் நடந்தவை.
தன் உறவினர்களிடம், 'புதிய பங்களா ராசியானது கிடையாது; இங்கு யார் வந்தாலும், அவர்களுக்கு பிரச்னைதான்' என, பதவி விலகியபோது சொல்லிவிட்டாராம் தன்கர். இந்த வார்த்தைகளால், பங்களாவை நிர்வகிக்கும் பொதுப் பணித்துறை பொறியாளர்கள் நொந்து போயுள்ளனர்.
'பா.ஜ.,வில் இல்லாதவர்களை, முக்கிய பதவிகளில் அமர்த்தினால் இப்படித்தான்' என்கின்றனர், மூத்த நிர்வாகிகள். 'ஜக்தீப் தன்கர் துவக்கத்தில் ஜனதா தளம், பின் காங்கிரஸ், அதன்பின் பா.ஜ., என, பல்வேறு கட்சி மாறியுள்ளார். அதேபோல, முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்காவும், ஜனதா தளம் கட்சியிலிருந்து, பா.ஜ.,விற்கு வந்தவர். அதேபோல அருண் ஷோரி.
பத்திரிகையாளராக இருந்து, வாஜ்பாய் அமைச்சரவையில், அமைச்சர் ஆனார். இவர்கள் அனைவருமே, பா.ஜ.,வில் எல்லா சுகத்தையும் அனுபவித்துவிட்டு, வெளியேறி கட்சியை விமர்சித்தவர்கள். இந்த பட்டியலில் இப்போது, தன்கரும் சேர்ந்துவிட்டார்' என்கின்றனர், பா.ஜ.,வினர். எது எப்படியோ... அடுத்த புதிய துணை ஜனாதிபதி, பூஜைகள் செய்த பின்தான், இந்த புதிய பங்களாவிற்குள் நுழைவார் போலிருக்கிறது.