ADDED : மார் 30, 2025 03:50 AM

புதுடில்லி: 'மூன்று மொழிக் கொள்கை, தமிழகத்திற்கு பணம் தரவில்லை, வக்பு சட்டம்' என, பல விஷயங்களை வைத்து, மத்திய அரசை எதிர்த்து, சட்டசபையிலும், வெளியிலும், தி.மு.க., பேசி வருகிறது.
'இதற்கு பதிலும் தர வேண்டும். அதேசமயம், தகுந்த ஆவணங்களைக் காட்டி, பார்லிமென்ட் ரெகார்டில் வரும்படி செய்து, தி.மு.க.,வை ஒரு வழியாக்க வேண்டும்' என, ஒரு திட்டத்தை தயார் செய்தாராம், உள்துறை அமைச்சர் அமித் ஷா; அதன்படி ஆறு மத்திய அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
பார்லிமென்டின் கேள்வி நேரம் மற்றும் விவாத நேரத்தின் போதும், இந்த அமைச்சர்கள் தி.மு.க.,வை ஒரு பிடிபிடித்து விட்டனர். இதற்கு தலைமை தாங்கி, தாக்குதலை துவங்கியவர் உள்துறை அமைச்சர். 'இலங்கை பிரச்னையில் தி.மு.க., என்ன செய்தது? 10 ஆண்டுகள் காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி நடத்தியது தி.மு.க., தானே?' என, கடுமையாக தாக்கியவர், '39 தமிழக எம்.பி.,க்கள், தமிழக நலன் குறித்து என்ன பேசினர், என்ன செய்தனர்?' எனவும் கேள்வி எழுப்பினார் ஷா.
'போதைப்பொருட்களும், மதுவும் தமிழகத்தை நாசப்படுத்திக் கொண்டிருக்கின்றன. 2026 தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வரும்போது, இதெல்லாம் இருக்காது' என அமித் ஷா கூறியபோது, தி.மு.க., - எம்.பி.,க்களால் வாய் திறக்க முடியவில்லை.
ஒரு தி.மு.க., - எம்.பி.,க்கு அவையில் வகுப்பெடுத்துவிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தேசிய கிரைம் பீரோ ஆவணங்களை சுட்டிக்காட்டி, 'தமிழகத்திலிருந்து அதிக அளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன' என, அவையில் பேசினார், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
இப்படி தி.மு.க.,வை பார்லிமென்டில் உலுக்கிவிட்டனர் மத்திய அமைச்சர்கள்.