டில்லி உஷ்ஷ்ஷ்: பீஹார் அரசியலும், மொரீஷியஸ் பயணமும்
டில்லி உஷ்ஷ்ஷ்: பீஹார் அரசியலும், மொரீஷியஸ் பயணமும்
ADDED : மார் 16, 2025 02:49 AM

புதுடில்லி: பிரதமர் மோடி எதைச் செய்தாலும், அதில் ஒரு அரசியல் ஆதாயம் இருக்கும். மொரீஷியஸ் நாட்டுக்கு சமீபத்தில் சென்று வந்தார்.
அதில் என்ன அரசியல் என கேட்கலாம். வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பீஹார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
மொரீஷியஸை ஒரு குட்டி பீஹார் என அழைக்கின்றனர். காரணம், பீஹாரிலிருந்து இங்கு புலம் பெயர்ந்தவர்கள் ஏராளமாக வசிக்கின்றனர்.
பிரிட்டிஷ் பிடியில் இந்தியா இருந்தபோது, பீஹாரில் இருந்து லட்சக்கணக்கானோரை இங்கு தோட்டத் தொழிலாளர்களாக அனுப்பியது ஆங்கிலேய அரசு. அத்தோடு மொரீஷியஸ் மக்கள் தொகையில், 70 சதவீதம் பேர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பீஹார் மக்கள் பேசும் போஜ்புரி மொழியில் பேசி அனைவரையும் அசத்திவிட்டார் மோடி. மேலும், மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலத்திற்கு பீஹாரில் பிரபலமான, 'மக்கானா' வை வழங்கினார். நம்ம ஊர் பொறி மாதிரி உள்ள இந்த மக்கானா அதிக அளவு சத்துக்கள் கொண்டது.
பீஹாரின், 10 மாவட்டங்களில் போஜ்புரி பேசப்படுகிறது; 73 தொகுதிகளில் போஜ்புரிதான் அதிகம் பேசப்படுகிறது. இதை நன்றாக புரிந்துகொண்ட மோடி, போஜ்புரியில் பேசியுள்ளார்.
மற்ற அரசியல்வாதிகள் எப்படி பிரசாரத்தை துவங்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது, மோடி பீஹார் தேர்தல் பிரசாரத்தை இப்போதே ஆரம்பித்து விட்டார் என்கின்றனர், சக அரசியல்வாதிகள்.