டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் பரிசுப்பெட்டி திட்டம்!
டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ.,வின் பரிசுப்பெட்டி திட்டம்!
ADDED : மார் 30, 2025 01:46 AM

புதுடில்லி: சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் கட்சி, பா.ஜ., என்ற ஒரு, 'இமேஜ்' உள்ளது. சிறுபான்மையினருக்காக பல நலத்திட்டங்கள் கொண்டு வந்தாலும், இந்த இமேஜ் பா.ஜ., மீது ஒட்டிக்கொண்டு விட்டது.
ஆனால், சமீபத்தில் பல மாநிலங்களில் நடைபெற்ற சட்ட சபை தேர்தல்களில் சிறுபான்மை மகளிர், பா.ஜ.,விற்கு ஓட்டளித்து உள்ளனர்.
இந்த ஆண்டு இறுதியில் பீஹார், அடுத்தாண்டு தமிழகம், மேற்கு வங்கம், கேரளா சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இங்கு, சிறுபான்மையினர் ஓட்டுகள் அதிகம். எனவே, இவர்களைக் கவர பா.ஜ., ஒரு அதிரடி திட்டம் தயாரித்து உள்ளது.
நாளை ரம்ஜான் பண்டிகை, அடுத்த மாதம், 14ம் தேதி சீக்கியர்களின் பைசாகி, 20ம் தேதி ஈஸ்டர். இதையொட்டி இவர்களுக்கு பரிசு வழங்க துவங்கிவிட்டது பா.ஜ., தலைமை. இந்த பரிசுப்பெட்டிக்கு, 'சவுகத் இ மோடி' அதாவது, 'பிரதமர் மோடியின் பரிசு' என, பெயர். இந்த பரிசு பெட்டகத்தில், பெண்கள் அணியும் சல்வார், கடலை மாவு, ரவை, சேமியா மற்றும் சர்க்கரை இருக்கும். கிட்டத்தட்ட, 32 லட்சம் பரிசு பெட்டகங்கள் பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சிறுபான்மையினருக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.