ADDED : டிச 08, 2024 03:40 AM

மும்பை: பா.ஜ., கூட்டணி மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ், சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே கட்சிகள் படு தோல்வி அடைந்தன. இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களிடையே மோடி மீது பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாம்.
அடுத்தாண்டு துவக்கத்தில் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன், பல நகரங்களின் நகராட்சி தேர்தல்களும் நடைபெறும். மும்பை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவி கிடைத்தால், கோடிகளை கையில் பார்க்கலாம்; ஒரு எம்.பி., - எம்.எல்.ஏ.,விற்கு கூட இவ்வளவு வருமானம் இருக்காது. அந்த அளவிற்கு மும்பை கவுன்சிலர்களுக்கு பணம் கொட்டும்.
இதனால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பலர் பா.ஜ.,வில் சேர தயாராக உள்ளனராம். ஆளும் கூட்டணியில் சேர்ந்தால், இவர்களின் ஆதரவாளர்களுக்கு மும்பை மாநகராட்சி கவுன்சிலர்களாக வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கின்றனர்.
உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவிடம் 20 எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரசிடம் 16, சரத் பவாரின் கட்சியிடம் 10 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள், ஆளுங்கட்சி பக்கம் தாவ முயற்சிகள் மேற்கொண்டுள்ளனராம்.
ஏற்கனவே படு தோல்வியை கண்ட காங்., மற்றும் எதிர்க்கட்சிகள், தங்கள் எம்.எல்.ஏ.,க்களை எப்படி தக்கவைத்துக் கொள்வது என திண்டாடி வருகின்றனவாம்.