ADDED : ஏப் 06, 2025 01:45 AM

புதுடில்லி: ராஜ்யசபாவில் வக்ப் மசோதா மீது நள்ளிரவை தாண்டியும் விவாதம் நீண்டபடியே இருந்தது. பா.ஜ., - எம்.பி., சுதான்சு திரிவேதி உருது, ஆங்கிலம், ஹிந்தி கலந்து சரளமாக பேசி வந்தார்.
ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூச்சலிட்டனர். சபையில் இருந்த வைகோவும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். உடனே, உள்துறை அமைச்சர் அமித் ஷா எழுந்து, 'வைகோவிற்கும் ஹிந்தி தெரிகிறது. தமிழகத்திலிருந்து வந்துள்ள எம்.பி.,க்களுக்கும் ஹிந்தி தெரிகிறது; பாராட்டுகிறேன்' எனக் கூறினார். பா.ஜ., - எம்.பி.,க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். ஆனால், தி.மு.க.,வினர் இதற்கு பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தனர்.
ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர், வைகோவை பேச அனுமதித்தார். வைகோ பேசத் துவங்கியதும், அமித் ஷா மீண்டும் எழுந்து, 'வைகோ உங்களுக்கு நன்றாகவே ஹிந்தி புரிகிறது' என்று சொல்ல, மீண்டும் பா.ஜ.,வினர் ஆரவாரம் செய்தனர். இதனால், தி.மு.க., - எம்.பி.,க்களின் முகங்கள் மிகவும் சுருங்கிவிட்டன.
ஹிந்திக்கு எதிராக தி.மு.க.,வினர் பேசி வரும் நிலையில், ராஜ்யசபாவின் நடவடிக்கைகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

