ADDED : செப் 22, 2024 03:47 AM

புதுடில்லி: இலவசங்களுக்கு எதிரானவர், பிரதமர் மோடி. அவருடைய மாநிலமான குஜராத்தில் இலவசங்களை அள்ளி வீசாமலேயே, முதல்வர் பதவியில் நீடித்தவர். 'இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கின்றன' என்ற கருத்தைக் கொண்டவர்.
ஆனால், சட்டசபை தேர்தல் என வந்துவிட்டால், பா.ஜ.,வும் இலவசங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது. வரும் அக்., 5ல் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
கர்நாடகா, தெலுங்கானா சட்டசபை தேர்தல்களில் இலவசங்களை அள்ளி வீசியது காங்கிரஸ்; விளைவு-, இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தது.
இலவசங்களால், கர்நாடக அரசின் நிதி நிலைமை தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஹரியானாவிலும், இப்படி இலவச அறிவிப்புகளை வெளியிட்டார் ராகுல். அவருக்கு, பா.ஜ.,வை ஆட்சியிலிருந்து எப்படியாவது நீக்க வேண்டும் என்பது தான் குறிக்கோள்!
'ஹரியானாவில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைப்பது கஷ்டம் தான்' என, சொல்லப்படும் நிலையில், 'கொள்கையாவது, மண்ணாவது' என, பா.ஜ., தலைவர் நட்டா இலவசங்களை அள்ளி வீசியுள்ளார்.
பெண்களுக்கு 2,100 ரூபாய், சமையல் காஸ் வெறும் 500 ரூபாய், 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என, இலவசங்களை அருவியாய் கொட்டியுள்ளார் நட்டா.
இதைப் பார்த்து காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. காரணம், காங்கிரசின் இலவசங்கள் -பெண்களுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை, சமையல் காஸ் 500 ரூபாய், சீனியர் சிட்டிசன்களுக்கு 6,000 ரூபாய் பென்ஷன், 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என, தன் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க இருந்தது. ஆனால், 'எங்கள் திட்டங்களை பா.ஜ.,வினர் காப்பி அடித்து விட்டனர்' என, காங்கிரசார் வெறுத்துப் போயுள்ளனர். 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பா.ஜ., ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள, கொள்கைகளை துாக்கி அடித்து விட்டது