ADDED : பிப் 02, 2025 02:05 AM

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு, இம்மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் என, தேர்தல் பிரசாரம் சூடாகியுள்ளதோடு, சகட்டு மேனிக்கு ஒருவரை ஒருவர் வசைபாடி வருகின்றனர்.
இதில் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரு மான, அரவிந்த் கெஜ்ரிவால் இஷ்டத்திற்கு பேசி வருகிறார். டில்லி மக்கள் குடிக்கும் குடிநீர் குறித்து இவர் கூறியது, இவருக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. 'டில்லிக்கு தேவையான குடிநீரை, பக்கத்து மாநிலமான ஹரியானா யமுனை நதி வழியாக தருகிறது. நதியில் விஷத்தை கலந்து, டில்லிக்கு அனுப்புகிறது ஹரியானா' என, சொல்லிவிட்டார் கெஜ்ரிவால். காரணம், ஹரியானாவில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இந்த விவகாரம், தற்போது தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இன்னொரு பக்கம் கெஜ்ரிவாலுக்கு எதிராக, ஹரியானா அரசு, சோனிபட் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளது. மக்கள் மத்தியில் கலவரத்தை உண்டாக்கி விட்டார் கெஜ்ரிவால் என, மிகவும் கடுமையான சட்டங்களின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. கெஜ்ரிவால், 17ம் தேதி ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
'தேர்தல் முடிந்தவுடன், இந்த வழக்கு பூதாகரமாக உருவெடுக்க உள்ளது; இதனால், பெரும் பிரச்னையில் சிக்கி விட்டார் கெஜ்ரிவால்' என்கின்றனர் ஆம் ஆத்மி கட்சியினர்.
இதுவரை, சிறுபான்மையினர் ஓட்டுகளை அள்ளி வந்தார் கெஜ்ரிவால். ஆனால், இப்போது, காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்து வருகிறது; இதனால், 'சிறுபான்மையினர் ஓட்டுகள் அங்கு போய்விடுமோ என்கிற அச்சத்தில் கண்டதையும் பேசி வருகிறார். இதுவே அவரது அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை' என்கின்றனர் காங்கிரசார்.