ADDED : டிச 15, 2024 12:37 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் அடிக்கடி சந்தித்தாலும், நிலைமை சரியில்லை என்று தான் சொல்லப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலரான ஆதவ் அர்ஜுனா, சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், 'வரும் 2026ல், தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்' என, தி.மு.க.,விற்கு எதிராக, குறிப்பாக, துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக கடுமையாக பேசினார்; இந்த விழாவில் நடிகர் விஜயும் பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து, கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனாவை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்துள்ளார் திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., கூட்டணியில் இருப்பதாக சொன்னாலும், இரண்டு கட்சிகளுக்கும் உறவு சரியல்லை என்பது, பார்லிமென்டில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
தி.மு.க., - எம்.பி.,க்கள், திருமாவளவனை பார்லிமென்டில் கண்டுகொள்வதில்லை. பார்லிமென்டின் மைய மண்டபத்தில் திருமாவளவன் வந்தால், சில தி.மு.க. - எம்.பி.,க்கள் முகத்தை திருப்பிக் கொண்டு வேறு பக்கம் சென்று விடுகின்றனர்.
'திருமாவின் அனுமதியில்லாமல் ஆதவ் பேசியிருக்க முடியாது' என, தி.மு.க.,வினர் கருதுகின்றனராம். அத்துடன், உதயநிதியை கடுமையாக விமர்சித்தது, தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு துளியும் பிடிக்கவில்லை.
இன்னொரு பக்கம் தமிழக காங்., - எம்.பி.,க்கள், அவர்களுடைய கூட்டணியான தி.மு.க., - எம்.பி.,க்களைக் கண்டுகொள்வதில்லை!