ADDED : ஜன 05, 2025 01:19 AM

புதுடில்லி: மன்மோகன் சிங் மறைவிற்கு, ஏழு நாள் துக்கம் அனுஷ்டிக்கும்படி காங்., தலைமை கேட்டுக் கொண்டது; மத்திய அரசும் ஏழு நாட்களுக்கு எந்த ஒரு அரசு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை. ஆனால், கூட்டணிக் கட்சியின் கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல், தமிழக தி.மு.க., அமைச்சர்கள் தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது வேறு விஷயம்.
இந்நிலையில், திடீரென வெளிநாடு சென்றுவிட்டார் ராகுல். புத்தாண்டைக் கொண்டாட வியட்நாம் சென்றுவிட்டாராம்; இது காங்., தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது.
தற்போது, வியட்நாம் நாட்டிலிருந்து, வேறொரு நாட்டிற்கு சென்றுவிட்டாராம் ராகுல். இந்திய உளவு பிரிவிற்கும், வெளிநாட்டில் உளவு பார்க்கும், 'ரா' அமைப்பிற்கும், ராகுல் எங்கு சென்றார் என தெரியவில்லை!
யாரோ ஒருவர் சிறப்பு விமானத்தில் வந்து, ராகுலை அழைத்துச் சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. டில்லியிலிருந்து சில சீனியர் உளவுத்துறை அதிகாரிகள், வியட்நாம் சென்று, 'ராகுல் எங்கு சென்றுள்ளார், அவரை அழைத்து செல்ல வந்த வி.ஐ.பி., யார்?' என்றும் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஒரு, 'டிவி' சேனலின் விழாவில் அமித் ஷா பங்கேற்றார். அவரிடம், சேனலின் செய்தி ஆசிரியர், 'ஏன் அடிக்கடி ராகுல் வெளிநாடு செல்கிறார்?' என, கேள்வி கேட்கிறார்.
அதற்கு அமித் ஷா, 'எனக்கெப்படி தெரியும்; இதை ராகுலிடம் கேளுங்கள்' என, பதில் தருகிறார். உடனே, நிகழ்ச்சியைக் காண வந்த கூட்டத்தில் ஒருவர் கை உயர்த்துகிறார். உடனே அமித் ஷா, 'அவரிடம் மைக்கை கொடுங்கள்' என்கிறார். அந்த நபர், 'தன் மனைவியை பார்க்க தான் ராகுல் வெளிநாடு செல்கிறார்' என பதில் சொல்ல, ஒரே கை தட்டல்.
அமித் ஷா, செய்தி ஆசிரியரைப் பார்த்து, 'அவருக்கு தெரிந்தது கூட உங்களுக்கு தெரியவில்லையே' என, சொல்கிறார். இதற்கு காங்கிரஸ் மேலிட தலைவர்கள், 'கூட்டத்தில் இருந்த அந்த நபர், அமித் ஷா, 'செட்டப்' செய்தவர்' என, பதில் கூறி உள்ளனர்.

