ADDED : நவ 03, 2024 02:52 AM

புதுடில்லி: டில்லி முதல்வராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கி, தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார் அரவிந்த் கெஜ்ரிவால். கைதாகி சிறையில் இருந்தவர், தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.
இவரது கட்சி, ஆம் ஆத்மி; அதாவது சாதாரண குடிமகன் என்பது. கட்சி துவங்கி முதன்முறையாக டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும்போது, 'நான் முதல்வரானால் என் வீடு வெறும் நான்கு அல்லது ஐந்து அறை உள்ள, ஒரு சாதாரண வீடாகத் தான் இருக்கும்; ஒரு எளிமையான வாழ்க்கை தான் என்னுடையது' என்றார், கெஜ்ரிவால்.
ஆனால் உண்மை அதுவல்ல என்பது, கெஜ்ரிவால், அரசு பங்களாவை காலி செய்தபோது தான் தெரிய வந்துள்ளது. தன் வீட்டை, கண்ணாடி மாளிகையாக மாற்றியுள்ளார் கெஜ்ரிவால்; இதற்கு, 45 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என, கடந்தாண்டே இது குறித்து செய்திகள் வெளியாகின.
இவர் வீட்டைக் காலி செய்த உடனேயே, டில்லி பொதுப்பணித்துறை உள்ளே நுழைந்து, புதிய முதல்வர் ஆதிஷிக்கு வீட்டை தயார் செய்ய ஆரம்பித்தது. இந்த பங்களாவில் உள்ள பொருட்களை கணக்கு எடுத்தனர். 21,000 சதுர அடி உள்ள இந்த பங்களாவில் உள்ள பொருட்களை பார்த்த அதிகாரிகள் அசந்து போயினர்.
'சாதாரண குடிமகனாக இருப்பேன்' என, கூறிய கெஜ்ரிவால், ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார் இந்த பங்களாவில்.
கிட்டத்தட்ட 64 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட 16 'டிவி'கள், மோட்டாரால் இயங்கக் கூடிய திரைச்சீலைகளின் விலை 5 கோடி. மேலும், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், வசதியாக சாய்ந்து அமரக் கூடிய சோபாக்கள். இப்படி ராஜபோக வாழ்க்கை நடத்தியுள்ளார், கெஜ்ரிவால்.
இதையெல்லாம் துாக்கி சாப்பிடும் வகையில் உள்ளது, இந்த பங்களாவில் உள்ள கழிப்பறைகள். இவை அனைத்தும் 'ஆட்டோமேடிக் ஸ்மார்ட் டாய்லெட்'கள். சென்சார் வாயிலாக தானாக திறக்கும் டாய்லெட் சீட். தானியங்கி சுத்தம் செய்யும் அமைப்பு என, ஒவ்வொரு கழிப்பறையும் ஆடம்பரமாக உள்ளதாம். இந்த கழிப்பறை அமைப்பு ஒன்றின் விலை 10 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாய் வரை.
'ஆம் ஆத்மி என சொன்னவர், இப்படி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளாரே' என, அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. ஆனால், கெஜ்ரிவால் இதுவரை வாயே திறக்கவில்லை.