டில்லி உஷ்ஷ்ஷ்: அதிகாரி மாற்றத்திற்கு காரணம் என்ன?
டில்லி உஷ்ஷ்ஷ்: அதிகாரி மாற்றத்திற்கு காரணம் என்ன?
ADDED : நவ 24, 2024 02:34 AM

சென்னை: தமிழக அதிகாரிகள் குறித்த ஒரு விஷயம் டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது. முக்கிய துறைக்கு, அதாவது, நீதிமன்ற வழக்குகளை சந்திக்கும் பிரிவில், சமீபத்தில் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்ட விஷயம்தான் அது.
தமிழக அரசின் அந்த முக்கிய துறையில் உள்ள ஒரு அதிகாரி, விருப்ப ஓய்வில் சென்றுவிட்டார். தி.மு.க., குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல தலைவர்கள், வழக்கில் சிக்கியுள்ள தி.மு.க.,வினருக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு அந்த அதிகாரியிடம் அடிக்கடி சொல்லி வந்தனர்.
இதனால் வெறுத்துப் போன அந்த அதிகாரி, 'எந்தவிவகாரமாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவும்' என, சொல்லிவிட்டாராம்; அத்துடன், அந்த அதிகாரியிடம் தரக் குறைவாகவும் பேசினாராம் தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்.
இதனால், 'போதும் வேலை' என, விருப்பு ஓய்வு பெற்றுக் கொண்டார் அந்த அதிகாரி.
இவரை அடுத்து, வேறு ஒருவரை அந்த பதவிக்கு நியமித்தனர். 'தி.மு.க.,விற்கு சாதகமாக செயல்படக் கூடியவர் இவர். எனவே இவரை மாற்ற வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்; ஆனாலும் அவரே பதவியில் தொடர்ந்தார்.
திடீரென, சமீபத்தில் அந்த அதிகாரியும் பதவியை ராஜினாமா செய்தார்; தன் சொந்த காரணத்திற்காக பதவி விலகுவதாக அறிவித்தார்.
ஆனால், 'உண்மை அதுவல்ல' என்கின்றனர். ஒரு வழக்கில் கைதாகி, பல மாதங்கள் சிறையில் இருந்த தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு, சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமாக சில வேலைகளை செய்யுமாறு, இந்த புதிய அதிகாரியிடம் கூறினர்.
தி.மு.க., அனுதாபி என்றாலும், 'இந்த வேலைகளை நீதிமன்றம் அனுமதிக்காது; அப்படி செய்தால் எனக்கு கெட்ட பெயர் வரும்' என்றாராம். 'அப்படியானால், வேலையை விட்டு போங்கள்' என, கட்சி மேலிடம் கறாராக சொல்லிவிட்டதாம். இதனால்தான் ராஜினாமா என, தமிழக அதிகாரிகள் மத்தியில் பேச்சு.
இப்போது வேறொரு புதிய அதிகாரி இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 'இவர் எத்தனை நாட்கள் இருப்பார்' என, கிண்டலடிக்கின்றனர் சில அதிகாரிகள்.