ADDED : டிச 22, 2024 01:31 AM

புதுடில்லி: அந்த தி.மு.க., -- எம்.பி., மிகவும் சீனியர்; விஷயம் தெரிந்தவர். பார்லிமென்ட் சட்ட திட்டங்களை நன்கு அறிந்தவர். இவரை சக தி.மு.க., - எம்.பி.,க்கள் பாசமாக, 'பூ எம்.பி.,' என, அழைக்கின்றனர். அதென்னது பூ... பூவிற்கும், இந்த எம்.பி.,க்கும் என்ன சம்பந்தம்?
பூ என்பது ஆங்கிலத்தில், 'பாயிண்ட் ஆப் ஆர்டர்' என்பதன் சுருக்கம். அதாவது, பி.ஓ.ஓ., இதை, 'பூ' என கிண்டலாக சொல்கின்றனர் தி.மு.க., - எம்.பி.,க்கள்.
பார்லிமென்டில் ஒரு விவாதம் நடைபெறும்போது, 'விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன' என, ஒரு எம்.பி., கருதினால், உடனே அவர் எழுந்து, ஆட்சேபனை தெரிவிக்கலாம்; அதை, 'பாயிண்ட் ஆப் ஆர்டர்' என, அழைப்பர். இதற்கு சபாநாயகரோ அல்லது ராஜ்யசபா தலைவரோ எம்.பி., எழுப்பிய ஆட்சேபனை சரியா என தீர்ப்பு வழங்குவர்.
தற்போது நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் இப்படி, 40க்கும் மேற்பட்ட, பாயிண்ட் ஆப் ஆர்டர்களை எழுப்பியுள்ளாராம் அந்த தி.மு.க., - எம்.பி., அதனாலேயே இப்படி ஒரு பட்டப்பெயர் வைத்து விட்டனர் சக எம்.பி.,க்கள். இந்த எம்.பி.,க்கு அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர்; காரணம், பல ஆண்டுகளாக இவர் எம்.பி.,யாக உள்ளார்.
'இந்த எம்.பி.,யிடமிருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள். பார்லிமென்டில் உதவியாக இருக்கும்' என, முன்னாள் முதல்வர் கருணாநிதியும், தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் மற்ற எம்.பி.,க்களிடம் கூறினாலும், யாரும் இந்த எம்.பி.,யைக் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக, துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளர்களான, 15க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் இவரை கண்டும் காணாமல் செல்கின்றனர்.