UPDATED : டிச 08, 2024 11:45 AM
ADDED : டிச 08, 2024 04:09 AM

மும்பை: சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களில் கடுமையாக பிரசாரம் செய்தார் காங்., முன்னாள் தலைவர் ராகுல். எங்கு சென்றாலும், கையில் ஒரு சிறிய சட்ட புத்தகத்தை வைத்துக் கொண்டு, 'மோடி சட்டத்தை ஒழிக்கப் பார்க்கிறார்' என, பிரசாரம் செய்தார். இன்னொரு பக்கம், 'அதானியும், மோடியும் நண்பர்கள்; அதானியிடம் நாட்டை தாரை வார்த்து விட்டார் மோடி' எனவும் பிரசாரம் செய்தார் ராகுல்.
ஆனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் படு தோல்வியடைந்தது காங்கிரஸ்; ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் வெற்றி. ஆனால், இதில் காங்கிரசை விட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிற்கு தான் அதிக பங்கு என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்போது, பார்லிமென்டிலும் இதையே கடைப்பிடித்து வருகிறார் ராகுல். அதானி, சட்டம் இரண்டு விஷயங்களை வைத்து பார்லிமென்டை முடக்கியது காங்கிரஸ்; இது, எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை.
பார்லிமென்டில் காங்., வெளிநடப்பு செய்தபோது, மற்ற எதிர்க்கட்சிகள் இதில் பங்கேற்கவில்லை. ஆனாலும், ராகுல் விடுவதாக இல்லை. பார்லிமென்ட் வளாகத்தில் மீண்டும் இதே போராட்டத்தை நடத்தி வருகிறார்.
'இரண்டு மாநில தேர்தல்களில் இந்த பிரசாரத்தை செய்து, அடி வாங்கியும் ராகுல் திருந்தவே மாட்டாரா' என, கட்சிக்குள்ளாகவே சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
'எத்தனையோ விஷயங்கள் பார்லிமென்டில் விவாதிக்க இருக்கும்போது, அதானி விவகாரத்தை எத்தனை நாட்களுக்கு தான் சொல்லிக் கொண்டிருக்க முடியும்?' என, கூட்டணி கட்சிகளும் கேள்வி எழுப்பியுள்ளதாம்.