டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ., முதல்வருக்கு தி.மு.க., பாராட்டு
டில்லி உஷ்ஷ்ஷ்: பா.ஜ., முதல்வருக்கு தி.மு.க., பாராட்டு
ADDED : ஜன 26, 2025 05:24 AM

புதுடில்லி: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாடு நடந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உட்பட உலகின் பல நாடுகளிலிருந்தும் தலைவர்களும், தொழிலதிபர்களும் இதில் பங்கேற்றனர்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் தமிழக அமைச்சர் ராஜா, மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிசை பாராட்டி பேசியுள்ளார். தி.மு.க., அமைச்சராக இருந்தாலும், பா.ஜ., முதல்வரை பாராட்டி பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ராஜாவின் அரசியல் மரியாதை, டில்லி வட்டாரங்களில் பாராட்டையும் பெற்றுள்ளது.
'பட்னவிஸ் ஒரு மக்கள் தலைவர்; அவர் மீது எனக்கும் மிகுந்த மரியாதை உள்ளது' என, பேசி உள்ளார் ராஜா. தமிழகத்தில் உலக நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, பல தொழிலதிபர்களுடன் பேச்சு நடத்தினார் ராஜா.
'தமிழகத்தில் முதலீடுகளைக் குவிக்க முயற்சிகள் செய்து வருகிறேன்; ஆனால், தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகளை மஹாராஷ்டிராவிற்கு இழுக்க பார்க்கிறார் பட்னவிஸ்; இதற்காக நான் வருத்தப்படவில்லை. வியட்நாம், மலேஷியா, இந்தோனேஷியாவிற்கு இந்த முதலீடுகள் போகாமல், இந்தியாவிற்கு வர வேண்டும். அது மஹாராஷ்டிராவோ அல்லது தமிழகமோ எதுவாக இருந்தாலும் சரி' என டி.ஆர்.பி. ராஜா பேசியது, மத்திய அமைச்சர்கள் அனைவரையும் கவர்ந்து உள்ளதாம்.