ADDED : ஜன 12, 2025 12:09 AM

புதுடில்லி: 'பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லவே இல்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பல முறை சொன்னாலும், டில்லியில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. 'ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதன் பின், தமிழ கத்தில் மீண்டும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கும்' என பா.ஜ.,வில் பேசப்படுகிறது.
'கூட்டணிக்காக என்ன வேலைகளை செய்ய வேண்டும் என, ஒரு சில தமிழக தலைவர்கள் பா.ஜ., தலைவர்களிடம் கூறி உள்ளனர். அதை நடைமுறைப்படுத்த, நட்டாவிற்கு பதிலாக பதவியேற்கும் பா.ஜ., தேசிய தலைவர் அமல்படுத்துவார்' என்கின்றனர்.
அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்களான வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருடன் நெருக்கமாக இருப்பவர், மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்; இவர் விரைவில் தமிழகம் வர உள்ளாராம். கூட்டணி தொடர்பான பூர்வாங்க வேலைகளை செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. பா.ஜ.,வின் தேசிய தலைவர், அ.தி.மு.க., பொதுச்செயலரை டில்லி வரும்படி அழைப்பு விடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, 'டில்லியில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தை பார்வையிட பழனிசாமி டில்லி வருவார்; அப்போது, பா.ஜ., தலைவர்களை சந்திப்பார்' என டில்லி பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.
'தேர்தல் என்றால் வெற்றி தான் முக்கியம்; அதற்கு கூட்டணி அவசியம். கூட்டணி அமைத்து, தமிழகத்தில் போட்டியிட்டால், தி.மு.க.,வை வீழ்த்த முடியும். எனவே, பா.ஜ., கூட்டணிக்கான வேலைகளில் இறங்கியுள்ளது' என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர்.
அ.தி.மு.க.,விலும், சில தலைவர்கள், 'கூட்டணி அமைத்து போட்டியிடாவிட்டால், அ.தி.மு.க., காணாமல் போய்விடும்' என்கிற கருத்தில் உள்ளனர்.