ADDED : ஜன 05, 2025 12:13 AM

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு, இந்தியா மட்டுமன்றி உலகத் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஹிமாச்சல முதல்வர்கள் டில்லி வந்து, காங்., அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மன்மோகன் சிங் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தவும், சிங் குடும்பத்தினரிடம் பேசவும், அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், 'மன்மோகன் சிங் வீட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம்; அவர் குடும்பத்தினருடனும் தொடர்பு கொள்ள வேண்டாம்' என்றும், காங்., மேலிடம், இந்த முதல்வர்களுக்கு கறாரான உத்தரவு போட்டுவிட்டதாம்.
இது, குறிப்பாக, காங்கிரசில் உள்ள சீக்கிய தலைவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாம். 'மோதிலால் நேரு சாலையில் உள்ள, மன்மோகன் வீட்டிற்கு பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா என, அனைத்து பா.ஜ., தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்தி, சிங்கின் குடும்பத்தாருடன் பேசிவிட்டு சென்றனர்.
'ஆனால் காங்., முதல்வர்களை அங்கு போக வேண்டாம் என, சொல்லி விட்டனர். தேவையில்லாத விஷயங்களை, இந்த விவகாரத்தில் எழுப்பினார் ராகுல். பா.ஜ., தலைவர்கள் உடனே மன்மோகன் சிங் வீட்டிற்கு சென்றது, எங்கள் சமூகத்தினருக்காக மோடி நிறைய செய்கிறார் என்கிற ஒரு எண்ணத்தை எங்களிடையே உருவாக்கிவிட்டது. காங்., முதல்வர்கள் நிச்சயமாக சிங் வீட்டிற்கு சென்றிருக்க வேண்டும்' என, சில காங்., சீக்கிய தலைவர்கள் கூறி வருகின்றனர்.
'காங்., முதல்வர்கள், மன்மோகன் சிங் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டால், சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இந்த முதல்வர்களின் உதவியை குடும்பத்தினர் எதிர்பார்க்கலாம் என, காங் மேலிடம் கருதியதாம்; அதனால் தான் முதல்வர்கள் அங்கே செல்ல வேண்டாம்' என சொல்லப்பட்டதாக பேச்சு அடிபடுகிறது.
டில்லி சட்டசபை தேர்தல் அறிவிப்பு, அடுத்த வாரம் வரும் என்றும், பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 'சீக்கியர்களின் ஓட்டுகள் அதிகமாக உள்ள நிலையில், காங்கிரசின் இந்த செயல்பாடு காங்கிரசுக்கு எதிராக சீக்கிய ஓட்டுகளை திருப்பும்' என, சொல்லப்படுகிறது.