ADDED : மார் 30, 2025 12:57 AM

புதுடில்லி: டில்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விஷயம் பலரையும் குழப்பிவிட்டது. பா.ஜ., - எம்.பி.,யாக இருப்பவர் தேஜஸ்வி சூர்யா. பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதியிலிருந்து, இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றவர். சென்னையில் உள்ள கர்நாடக இசைக்கலைஞரும், பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்தார் சூர்யா.
இவரும், இவரது மனைவியும், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., - எம்.பி.,யுமான ராஜாவை சமீபத்தில் டில்லியில் சந்தித்தனர். சூர்யா ஒரு ஹிந்துத்வவாதி; ராஜாவோ ஹிந்துத்வாவை கடுமையாக எதிர்ப்பவர்; மேலும், பல மேடைகளில், ஹிந்துக்களை கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்.
'அப்படியிருக்கும்போது, ராஜாவை, மனைவி சகிதமாக ஏன் சூர்யா சென்று பார்க்க வேண்டும்' என, பா.ஜ., - எம்.பி.,க்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது தி.மு.க.,விலும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. தி.மு.க., - எம்.பி.,க்களும் இந்த சந்திப்பு குறித்து ஆச்சரியப்படுவதுடன், 'எதற்கு பா.ஜ., - எம்.பி.,யுடன் சந்திக்க வேண்டும்?' என, கேள்வி எழுப்புகின்றனர்.
'ராஜா ஒரு சீனியர் எம்.பி., சபாநாயகர் இல்லாதபோது சபையை நடத்தும் பொறுப்பில் இருப்பவர். எனவே, மரியாதை நிமித்தமாகத்தான் அவரைச் சந்தித்தோம்' என, சக எம்.பி.,க்களுக்கு பதில் சொன்னாராம் சூர்யா. ஆனால், இதை யாரும் நம்பத் தயாராக இல்லை. 'இரண்டு அரசியல்வாதிகள் சந்திக்கின்றனர் என்றால், அரசியல் பேசாமல் இருப்பரா?' என்கின்றனர்.