ADDED : மார் 16, 2025 01:14 AM

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு எப்போதுமே ஒரு விஷயம் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. மத்திய அரசு செய்யும் பல நல்ல விஷயங்கள், மக்களுக்கு உதவும் திட்டங்கள் ஆகியவற்றை, மக்களுக்கு மீடியா சரியாக எடுத்துச் செல்வதில்லை என்பது அவரது குறை. இதனால் துார்தர்ஷனில் செய்தித் துறையை முற்றிலுமாக மாற்றி அமைக்க முடிவெடுத்து, சுதிர் சவுத்ரி என்பவரை செய்தி துறைக்கு தலைவராக நியமித்துவிட்டார். இவர் பிரபல ஹிந்தி சேனலான, 'ஆஜ்தக்'கில் பணியாற்றியவர்.
சுதிர், துார்தர்ஷனில் பல மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறார். ஹிந்தி மட்டுமல்லாமல், துார்தர்ஷனின் தமிழ், மலையாளம் உட்பட அனைத்து மாநில மொழி செய்திகளிலும் பெரும் மாற்றம் வர உள்ளதாம்.
மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள், திட்டங்கள், அவர்களது ஆலோசனைகள், மோடி அரசின் திட்டங்கள் மக்களுக்கு எப்படி உதவுகின்றன என, அரசு சார்பான பல செய்திகளை சுவாரஸ்யமாக தர சுதிர் திட்டமிட்டுள்ளார். இதைத் தவிர, தனியாக ஒரு நிகழ்ச்சியும் தயாரிக்க உள்ளாராம்.
டாஸ்மாக் ஊழல் உட்பட எதிர்க்கட்சிகளின் ஊழல் பட்டியல், அது தொடர்பான செய்திகள், விவாதம் என, துார்தர்ஷன் இனி டல் அடிக்காமல் பரபரப்பாக தனியார் தொலைக்காட்சிகளுக்கு ஈடாக செயல்படப் போகிறதாம்.
அடுத்த மூன்று மாதங்களில் இந்த மாறுதல்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது, துார்தர்ஷனை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தின் முதல் படியா இது என, டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.