தி.மு.க., எம்.பி.,க்கள் வாட்ஸ்அப் குரூப் தகவல்: பா.ஜ.,வுக்கு பார்சல்
தி.மு.க., எம்.பி.,க்கள் வாட்ஸ்அப் குரூப் தகவல்: பா.ஜ.,வுக்கு பார்சல்
UPDATED : ஏப் 13, 2025 07:40 AM
ADDED : ஏப் 12, 2025 11:57 PM

அனைத்து கட்சிகளும், 'வாட்ஸாப்' குழுக்கள் வைத்துள்ளன. கட்சிக்குள் கருத்து தெரிவிக்க இதைப் பயன்படுத்துகின்றனர். மேலும், கருத்து வேறுபாடுகளையும் இதில் தெரிவிக்கின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி வாட்ஸாப் குரூப்பிலிருந்த விபரங்கள், சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.
திரிணமுல் எம்.பி., ஒருவர், மம்தாவை கிண்டலடிக்கும் கருத்துகளை வாட்ஸாப்பில் தெரிவித்திருந்தார். இதை, மற்றொரு திரிணமுல் எம்.பி., - பா.ஜ.,வைச் சேர்ந்த பிரமுகருக்கு அனுப்பி வைத்து விட்டார்.
உடனே அந்த பா.ஜ., பிரமுகர் பத்திரிகைகளுக்கு இதை அனுப்ப, திரிணமுல் காங்கிரசில் நடக்கும் சம்பவங்கள் வெட்ட வெளிச்சமாகி விட்டன.
இதையடுத்து சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தங்கள் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் வாட்ஸாப் குரூப்பில் எந்தவிதமான தேவையில்லாத கருத்துகளையும் தெரிவிக்க வேண்டாம் என, அறிவுறுத்தி உள்ளன.
தி.மு.க., - எம்.பி.,க்களுக்கும் வாட்ஸாப் குரூப் உள்ளது. அனைத்து எம்.பி.,க்களும் சபையில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உத்தரவுகள் இதில் வருகின்றன. இந்த உத்தரவுகளை கனிமொழிதான் அனுப்புகிறார்.
டி.ஆர்.பாலு இந்த விவகாரத்திலிருந்து ஒதுங்கிவிட்டார். இந்த வாட்ஸாப் குரூப்பில் உதயநிதி ஆதரவாளர்கள் அதிகம். அவர்கள், கனிமொழியின் உத்தரவை பொருட்படுத்துவது இல்லை என சொல்லப்படுகிறது.
தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு வாட்ஸாப்பில் வரும் விஷயங்கள் பா.ஜ.,வுக்கு அனுப்பப்படுகிறதாம். இதனால், தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

