பா.ஜ., பிரசாரம் முறியடிக்க ரூ.250 கோடியில் கோவில் கட்டிய மம்தா: டில்லி உஷ்ஷ்...!
பா.ஜ., பிரசாரம் முறியடிக்க ரூ.250 கோடியில் கோவில் கட்டிய மம்தா: டில்லி உஷ்ஷ்...!
UPDATED : மே 04, 2025 08:11 AM
ADDED : மே 04, 2025 04:47 AM

புதுடில்லி: 'மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுகிறார். ஹிந்துக்களுக்கு எதிரானவர்' என, பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர்.
வக்ப் சட்டத்திற்கு எதிராக, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில் கலவரம் வெடித்தது; இதில், ஹிந்துக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பா.ஜ., தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் ஒரு விஷயத்தை செய்துள்ளார் மம்தா. அட்சய திரிதியை அன்று, 'டிகா' என்ற இடத்தில், 'ஜகன்னாத் தாம்' என்ற கோவிலை திறந்து வைத்துள்ளார்.
'ஹிந்துக்களுக்கு எதிரானவர் என்ற பா.ஜ.,வின் பிரசாரத்தை முறியடிக்க, மம்தா இதை செய்துள்ளார்' என்கின்றனர். இந்த டிகா கோவில் திறப்பு விழா மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது; இதில், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் என பலர் பங்கேற்றனர்; இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த கோவிலை கட்ட, மம்தா அரசு 250 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
கலிங்கத்து பாணியில் கட்டப்பட்டுள்ளது இந்த கோவில். ஒடிஷா மாநிலத்தில் புரியில் உள்ள ஜகன்னாத் கோவிலைப் பார்க்க முடியாதவர்கள், இங்கு வந்து தரிசிக்கலாம். மேற்கு வங்க சட்டசபையில், எதிர்க்கட்சி தலைவராக உள்ள பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி, மம்தாவின் கோவில் திறப்பை எதிர்த்துள்ளார்.
'ஹிந்து கோவில்கள், மாநில கோவில்கள் அல்ல' என்கிறார். நம் ஊர் போல, கோவில்களை மேற்கு வங்கத்தில் அரசு ஏற்று நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முர்ஷிதாபாதில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஹிந்து கோவில்களை, தன் சொந்த பணத்தில் சீரமைத்து வருகிறார் சுவேந்து அதிகாரி.