குரங்கு கூட்டம் அட்டகாசம்: பார்லி., வர எம்.பி.,க்கள் அச்சம்
குரங்கு கூட்டம் அட்டகாசம்: பார்லி., வர எம்.பி.,க்கள் அச்சம்
UPDATED : ஜூன் 29, 2025 08:27 AM
ADDED : ஜூன் 29, 2025 01:21 AM

புதுடில்லி: பார்லிமென்ட் வருவது என்றாலே, பெரும்பாலான எம்.பி.,க்கள் அச்சப்படுகின்றனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பேதம் பார்க்காமல், இப்படி அனைத்து எம்.பி.,க்களையும் நடுநடுங்க வைக்கின்றன குரங்குகள்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்திற்கு பக்கத்தில், 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைய மரங்கள் அதிகம் உள்ளன; இங்கு ஏராளமான குரங்குகள் உள்ளன. பார்லிமென்டிற்குள் எம்.பி.,க்கள் நுழைய இரண்டு வாயில்கள் உள்ளன. ஒன்று ரயில் பவன் அருகேயும், இன்னொன்று டிரான்ஸ்போர்ட் பவன் அருகிலும் உள்ளது.
இந்த டிரான்ஸ்போர்ட் பவன் வாயில் வழியாக வரும் எம்.பி.,க்கள், குரங்குகளை சமாளிக்க வேண்டும். திடீரென இவர்கள் முன் குரங்குகள் ஆஜராகி, எம்.பி.,க்களின் கைப்பைகளை பறித்துச் செல்கின்றன. காரணம், இந்த பைகளில் ஏதாவது தின்பண்டம் உள்ளதா என, அவை ஆராய்வது வழக்கமாகிவிட்டது. இதன் காரணமாக, பார்லிமென்ட் காவலர்கள், குரங்குகளின் பின்னால் ஓடுகின்றனர்.
சமீபத்தில், மத்திய அமைச்சர் ஒருவரின் மூக்கு கண்ணாடியை, குரங்கு எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது; அதை திரும்ப பெறுவதற்குள், காவலர்கள் திண்டாடிவிட்டனர். வடமாநில பா.ஜ., - எம்.பி.,க்கள், குரங்குகளை ஹனுமனாக பார்க்கின்றனர். அவர்கள், குரங்குகளுக்கு வாழைப்பழம் கொடுத்து, 'ஜெய் ஸ்ரீராம்' என, சொல்கின்றனர். 'இதனால்தான் பார்லிமென்ட் வளாகத்தில், குரங்குகள் திரிகின்றன' என்கின்றனர், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள்.
இதுகுறித்து, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார்களும் தரப்பட்டு உள்ளனவாம். வனத்துறையினரிடம் கூறினால், அவர்கள் குரங்குகளைப் பிடித்துச் சென்று, அருகில் உள்ள காட்டில் விடுகின்றனர்; ஆனால், அவை மறுபடியும் பழைய இடத்திற்கே வந்துவிடுகின்றன. 'இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது?' என, குழப்பத்தில் உள்ளார் ஓம் பிர்லா.
'லங்கூர்' என்ற சிங்கவால் குரங்கை பார்த்தால், சாதாரண குரங்குகள் ஓடிவிடும்; அருகிலே வராது என்பதால், லங்கூர் குரங்கை கொண்டு வர முயற்சிகள் நடக்கிறதாம்.
குரங்குகள் பிரச்னை பார்லிமென்டிற்கு மட்டுமல்ல... அருகே உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் அவை புகுந்து அட்டகாசம் செய்கின்றன.