டில்லி உஷ்ஷ்ஷ்: லட்சக்கணக்கில் செலவு செய்தும் கூட்டம் இல்லை
டில்லி உஷ்ஷ்ஷ்: லட்சக்கணக்கில் செலவு செய்தும் கூட்டம் இல்லை
ADDED : ஏப் 27, 2025 05:25 AM

புதுடில்லி: காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சமீபத்தில், பீஹார் மாநிலத்தில் உள்ள பக்சர் என்ற ஊரில் ஒரு பிரமாண்ட கூட்டத்தில் பேச இருந்தார். பட்டியலின மக்களின் ஓட்டுகளை சேகரிப்பதற்காக தான், இந்த கூட்டம் ஏற்பாடாகி இருந்தது.
டில்லியிலிருந்து, 25 லட்சம் ரூபாய் செலவு செய்து, தனி விமானம், பின் ஹெலிகாப்டர் என பயணம் செய்து பக்சர் சென்றார் கார்கே.
ஆனால், மேடைக்கு சென்றவருக்கு கடும் அதிர்ச்சி. பார்வையாளர்களுக்கு போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தன. கிட்டத்தட்ட, 50 பேர் மட்டுமே இருந்தனர்; அதில் பாதி பேர் கட்சி நிர்வாகிகள்.
கோபத்தின் உச்சிக்கே சென்ற கார்கே, உடனே கூட்டத்தை ரத்து செய்துவிட்டு திரும்பி விட்டார். ஹெலிகாப்டரில் ஏறும்போது டில்லிக்கு போன் செய்து, 'உடனே பக்சர் மாவட்ட காங்., தலைவர் மனோஜ் பாண்டேவை சஸ்பெண்ட் செய்யுங்கள். கூட்டம் கூட்ட, 15 லட்சம் ரூபாய் பாண்டேவிற்கு தரப்பட்டது. ஆனால், கூட்டமே இல்லை' என, புலம்பி தள்ளிவிட்டாராம் கார்கே.
இவர் பேசியதை, அங்கிருந்த பீஹார் போலீசார் மொபைல் போனில், 'ரெக்கார்டு' செய்து, முதல்வர் நிதிஷ் குமாருக்கு அனுப்பிவிட்டனர்; இந்த ஆடியோ, பீஹார் அரசியல்வாதிகளிடையே தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'பாண்டே சஸ்பெண்டிற்கு காரணம், கட்சி விவகாரம் என காங்கிரஸ் சொன்னாலும், உண்மை இந்த கூட்டம் விவகாரம் தான். பக்சரில் உயர்ஜாதி மக்கள் அதிகம். அவர்கள் எப்படி இந்த பட்டியலின மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்திற்கு வருவர்? அத்துடன், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் வேறு. இந்த சமயத்தில் இந்த கூட்டத்தை ஏன் நடத்த வேண்டும்? இது டில்லி தலைவர்களின் தவறு' என, வெறுப்பாக சொல்கின்றனர் பீஹார் காங்., தொண்டர்கள்.
'பீஹாரில், காங்கிரஸ் ஏற்கனவே பரிதாப நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தால், லாலுவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரசுக்கு, பீஹார் சட்டசபை தேர்தலில் குறைந்த தொகுதிகளே கிடைக்கும்' என்றும் சொல்லப்படுகிறது.

