ADDED : டிச 08, 2024 12:15 AM

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவரு மான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி. தற்போது எம்.பி.,யாக உள்ள இவர், கட்சியின் முக்கிய பொறுப்பிலும் உள்ளார்.
'கட்சியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும்' என, மம்தாவிடம் ஒரு 'ரிப்போர்ட்' கொடுத்துள்ளார். இதில், இளைஞரான தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என, மறைமுகமாக தெரிவித்திருந்தார் அபிஷேக் பானர்ஜி.
உடனே, இவரது ஆதரவாளர்களும், 'அபிஷேக்கிற்கு அமைச்சர் பதவி தர வேண்டும்' என, வற்புறுத்தி வந்தனர். ஆனால், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் மம்தா. அதற்கு காரணம், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல். ஆறு தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் திரிணமுல் வெற்றி பெற்றது; இதில், ஒரு தொகுதி பா.ஜ., வசம் இருந்தது; அதையும் மம்தா கட்சி கைப்பற்றி விட்டது.
இந்த முடிவுகள், கட்சியின் பாஸ் மம்தா என்பதை நிரூபித்து விட்டன. இதையடுத்து, அபிஷேக் ஆதரவாளர்களுக்கு, 'ஷாக்' கொடுத்துள்ளார் மம்தா. அபிஷேக்கிற்கு நெருக்கமான எம்.எல்.ஏ.,வான ஹுமாயூன் கபீர் மற்றும் அருப் கோஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது, மம்தா நியமித்த ஒரு கமிட்டி. கட்சிக்கு எதிராக இருப்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மம்தாவால் அமைக்கப்பட்ட குழு தான் இது.
அபிஷேக்கின் ஆதரவாளர்களை ஓரங்கட்ட ஆரம்பித்துள்ளார் மம்தா என்பது தெளிவாகி விட்டது. யாராக இருந்தாலும், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினால், நடவடிக்கை உண்டு என்பது உறுதியாகிவிட்டது. அபிஷேக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என, மேற்கு வங்க அரசியல்வாதிகள் காத்திருக்கின்றனர்.