ADDED : ஏப் 27, 2025 12:20 AM

புதுடில்லி: 'இந்தியாவோடு நேரடியாக மோதினால் தோல்வி' என்பதை உணர்ந்து கொண்ட பாகிஸ்தான், பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி, தாக்குதல்களை நடத்தி வருகிறது. தாக்குதலுக்கு பின், காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள இந்தியா - -பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் ராணுவத்தை அதிகரித்துவிட்டது பாகிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்த டாங்குகளை திரும்ப அழைத்து, இந்திய எல்லையில் நிறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் விமான படையின் நிலைமை மோசம். பல போர் விமானங்கள் பரிதாப நிலையில் உள்ளன. இந்த விமானங்களுக்கான உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை; மேலும், பாகிஸ்தான் டாங்குகள் நீண்ட துாரம் பயணித்தால், அதற்கு தேவையான போதிய டீசலும் கிடையாது.
இன்னொரு பக்கம், பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் புரட்சி நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இங்குள்ள மக்கள் செயல்பட்டு வருகின்றனர். பலுசிஸ்தான், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலேயே இல்லை; அத்துடன், பாகிஸ்தானின் நிதி நிலைமையும் மோசமாக உள்ளது.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இதுவரை மூன்று போர்கள் நடைபெற்று உள்ளன; அனைத்திலும் பாகிஸ்தான் பரிதாபமாக தோற்றது. இப்போது, நான்காவது முறையாக போர் நடந்தால், பாகிஸ்தானின் நிலைமை என்னவாகும் என்பது, அங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
'பாகிஸ்தானின் ராணுவ தளபதியான ஆசிம் முனிரின் உத்தரவின் அடிப்படையில் தான், பஹல்காமில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. எனவே இவர், பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தி விட்டார்' என, பாகிஸ்தானில் எதிர்ப்பு குரல்கள் எழுந்து உள்ளதாம்.

