டில்லி உஷ்ஷ்ஷ்: தலைமை செயலரை சந்திப்பாரா உள்துறை அமைச்சர் அமித் ஷா
டில்லி உஷ்ஷ்ஷ்: தலைமை செயலரை சந்திப்பாரா உள்துறை அமைச்சர் அமித் ஷா
UPDATED : ஏப் 20, 2025 07:20 AM
ADDED : ஏப் 20, 2025 01:49 AM

புதுடில்லி: தமிழக கவர்னர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த மகிழ்ச்சியில் உள்ளது தி.மு.க., அரசு. இந்த தீர்ப்பில் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவது குறித்து கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்; இது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. ஒரு சில சட்ட நிபுணர்களும், இந்த தீர்ப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
'நீதிபதிகள் ஒரு வழக்கை விசாரித்து, தீர்ப்பிற்காக ஒத்தி வைத்து ஓராண்டு கழித்து தீர்ப்பு அளிக்கின்றனர். ஏன் இவர்களுக்கு எதுவும் காலக்கெடு கிடையாதா?' என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளது.
'இதற்கிடையே ரவி கவர்னராக நீடித்தால், தி.மு.க., வெற்றிக்கொடி நாட்டும்' என, தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். 'புதுச்சேரியில் காங்கிரஸ் முதல்வராக இருந்த நாராயணசாமியை எப்படி அப்போதைய துணைநிலை கவர்னர் கிரண் பேடி ஓடவிட்டாரோ, அதேபோல தமிழகத்திலும் நடக்கும்' என்கிறது பா.ஜ., மேலிடம்.
'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பல புகார்கள் வந்துள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷா அடுத்த மாதம் தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாம். அப்போது, அவர் தமிழக தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி,யை அழைத்து, அவர்களிடம் புகார்கள் குறித்து விவாதிப்பார் என, சொல்லப்படுகிறது; அப்போது கவர்னர் ரவியும் உடன் இருப்பாராம்.
'உள்துறை அமைச்சரை சந்திக்க, தலைமை செயலரையும், டி.ஜி.பி.,யையும் முதல்வர் ஸ்டாலின் அனுமதிப்பாரா?' என, கேள்விகள் எழுந்துள்ளன.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், இதே போன்று பிரச்னை வந்தபோது, 'தலைமை செயலரும், டி.ஜி.பி.,யும் மத்திய அரசுடன் பேசக் கூடாது' என உத்தரவிட்டார் மம்தா பானர்ஜி. அதேபோல தமிழக முதல்வரும் செய்வாரா?