டில்லி உஷ்ஷ்ஷ்: தி.மு.க.,- கம்யூ., கூட்டணி தொடருமா?
டில்லி உஷ்ஷ்ஷ்: தி.மு.க.,- கம்யூ., கூட்டணி தொடருமா?
ADDED : மார் 23, 2025 01:21 AM

புதுடில்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு அடுத்த மாதம் 2ம் தேதி முதல், 6ம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின்போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
பா.ஜ.,வை எதிர்க்க என்னென்ன உத்திகளை கையாளலாம், தேர்தலில் இடதுசாரிகளின் தனித்துவம், மாநில அரசின் உரிமைகள், அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்துவது என, பல விஷயங்கள் இந்த மாநாட்டில் அலசப்பட உள்ளன.
கட்சி பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி காலமானதால், இடைக்கால தலைவராக பிரகாஷ் காரத் உள்ளார். மதுரை மாநாட்டில் புதிய தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுவார். கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபியின் பெயர் அடிபடுகிறது; இவர், மாநில அமைச்சர், எம்.பி., என, பல பதவிகளை வகித்துள்ளார்.
'மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கும் ஒரு முக்கிய பதவி கிடைக்கும். ஆனால், இவருக்கு எதிராக பல புகார்கள் உள்ளன' என்கின்றனர் கட்சியினர்.
'தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டணி குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்' என சொல்லப்படுகிறது. தி.மு.க., - -இடதுசாரி உறவு அவ்வளவாக சரியில்லை. அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி தொடருமா அல்லது விஜய் பக்கம் போவதா, அ.தி.மு.க.,வுடன்- கூட்டணி அமைக்கலாமா என்றும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாம்.