டில்லி உஷ்ஷ்ஷ்: வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவாரா?
டில்லி உஷ்ஷ்ஷ்: வயநாட்டில் பிரியங்கா போட்டியிடுவாரா?
ADDED : ஆக 18, 2024 01:22 AM

வயநாடு: கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், நுாற்றுக்கணக்கில் மக்கள் இறந்தனர்; பலர் காணாமல் போயினர். குழந்தைகள், தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர். நாடு முழுதும் இருந்து, நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
வயநாடு தொகுதி எம்.பி.,யாக இருந்தவர் ராகுல். இந்த முறையும், வயநாட்டில் வெற்றி பெற்றார். ஆனால், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், வயநாடு தொகுதி எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இதனால், இங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது, ராகுலின் சகோதரி பிரியங்கா போட்டியிட்டு, அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்தில் குதிப்பார். இது காங்கிரசின் தொகுதி; சுலபமாக பிரியங்கா வெற்றி பெறுவார் என, காங்., எதிர்பார்க்கிறது.
ஆனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவிற்குப் பின், காங்கிரசின் நிலைமை மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் எம்.பி.,யாக இருந்த ராகுலுக்கு எதிராக ஆளும் கூட்டணியான இடதுசாரிகள் புகார் கூறி வருகின்றனர்.
'வயநாடு, நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதி; இதை பாதுகாப்பது எப்படி? அதற்கான ஏற்பாடுகள் செய்வது குறித்து, வயநாடு எம்.பி.,யாக இருந்த ராகுல் பார்லிமென்டில் பேசியது கிடையாது. நிலச்சரிவை தடுக்க, விஞ்ஞானப்பூர்வ திட்டங்களை கொண்டு வரவும் அவர் முயற்சிக்கவில்லை' என, மக்களிடையே இடதுசாரிகள் செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால், இங்கு போட்டியிட பிரியங்கா தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
'வயநாடு நிலச்சரிவு, இங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் சரிவைக் கொடுக்கும்' என, தன்னை சந்திக்க வந்த பா.ஜ., தலைவர்களிடம் கிண்டலடித்தாராம், முதல்வர் பினராயி விஜயன்.