'ரிமோட்'டை துாக்கி போட்டதுதான் ஜனநாயகம்; கமல் பேச்சால் மண்டை காய்ந்த தொண்டர்கள்
'ரிமோட்'டை துாக்கி போட்டதுதான் ஜனநாயகம்; கமல் பேச்சால் மண்டை காய்ந்த தொண்டர்கள்
ADDED : நவ 19, 2025 03:22 AM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்கரியப்பட்டியில், 'நம்மவர் நுாலகம், படிப்பகம், கலைக்கூடம்' ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இதில், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களோடு, அக்கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான நடிகர் கமல் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது:
அன்பு, கட்சியை தாண்டியது. அண்ணாதுரை மேல் எனக்கு இருக்கும் அன்பும் அப்படிப்பட்டதுதான். அண்ணாதுரையிடம் கற்ற பிள்ளைகள் எல்லாருக்கும், அவர்களிடம் கற்றவர்களுக்கும், இதே குணாதிசியம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
பதவி வரும்போது, பணிவும், துணிவும் வர வேண்டும். பணிவுக்காக துணிவை இழக்கும் சுயமரியாதை அற்றவர்கள் அல்ல எங்கள் கூட்டம்.
அரசியல் கட்சி ஆரம்பிக்காமல், தொண்டுகள் செய்து விட்டு, பின் மூத்தவர்களிடம் அரசியல் அறிவுரை பெற்று, பின் கட்சி தொடங்கி இருக்கிறேன்.
இதில், மாற்று கருத்து இருந்தே ஆக வேண்டும். அதற்கு பெயர் தான் ஜனநாயகம். ஆனால், நாடு என்று வரும்போது நாம் கூடி நின்றாக வேண்டும்.
'கட்சி துவங்கியதும் கடுமையாக தி.மு.க.,வை எதிர்த்த நீங்கள், பின், ரிமோட்டை துாக்கி டி.வி., மேல் போட்டு விட்டு, தி.மு.க., கூட்டணிக்கே போய் விட்டீர்களே?' என கேட்கின்றனர். ரிமோட்டை துாக்கி போட்டேன். அதான் ஜனநாயகம்.
ஆனால், ரிமோட்டை வேறு ஒருவன் துாக்கிட்டு ஓடிட்டான். ஆக, அங்கு போகக்கூடாது. ரிமோட், ரிமோட் ஸ்டேட்டில் தான் இருக்க வேண்டும், கல்வியும் அப்படித்தான்.
நமக்குள் சண்டை வந்து விட்டால், மூன்றாவது நபர், ஆட்சியை எடுத்துச் சென்று விடக்கூடும்.
அதற்காக எடுத்த முடிவுதான், தி.மு.க., கூட்டணியில் இணைந்தது. புரிந்தால் புரியட்டும். இல்லை என்றால் சும்மா இருங்கள்.
ஜனநாயகம் என்று வந்து விட்டால், இப்படிப்பட்ட தொல்லைகள் இருக்கத்தான் செய்யும். புரிந்து கொள்ள வேண்டும், அது வேண்டாம் என்றால், மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
கமலின் இந்த பேச்சால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொண்டர்கள் குழம்பி போயினர்.
நிகழ்ச்சி முடிந்ததும், 'தலைவர் என்ன பேசினார்?' என ஒருவர் அடுத்தவரிடம் கேட்டு தெளிவு பெற விரும்பினர்.
யாருக்கும் எதுவும் புரியாததால், கமல் பேச்சு குறித்து, ஆளாளுக்கு ஒரு பொழிப்புரை வழங்கிச் சென்றனர்.

