பழனி பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் ஜனநாயக வாலிபர் சங்க மாநாடா?
பழனி பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் ஜனநாயக வாலிபர் சங்க மாநாடா?
ADDED : ஜூலை 17, 2025 03:26 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள பழனி பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பின் ஒன்றிய மாநாடு நடந்தது.
இதில், எம்.பி., சச்சிதானந்தம் கலந்து கொண்டார். இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது:
பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் செல்லும் போது ஓய்வு எடுத்துச் செல்ல, அவர்களின் காணிக்கை பணத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் 'மதம்' என்றால் 'அபின்' என்ற கொள்கை உடைய கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் கிளை அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம் நடத்த, எந்த அடிப்படையில் அறநிலையத் துறை, பழனி கோவில் தேவஸ்தானம் அனுமதி வழங்கியது. இதேபோல், பிற கட்சிகள் கூட்டம் நடத்திட அனுமதி வழங்குவரா?
சட்டவிரோதமாக அனுமதி அளித்த அதிகாரிகள் மீது அறநிலையத்துறை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடி, உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து தக்க நடவடிக்கை எடுத்திட வலியுறுத்துவோம் என்றார்.
விசுவ ஹிந்து பரிஷத் திருக்கோவில், திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
பக்தர்கள், நன்கொடையாளர்களின் பணத்தில் கட்டப்பட்ட மண்டபத்தில், அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி அளித்தது தவறு. ஆளும் தி.மு.க., அரசுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய கட்சிகள், பக்தர்கள் ஓய்வு எடுக்க எடுக்கும் மண்டபங்களை பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.