காய்ந்தும், சாய்ந்தும் பயிர்கள் நாசம்: டெல்டா விவசாயிகளுக்கு சோகம்
காய்ந்தும், சாய்ந்தும் பயிர்கள் நாசம்: டெல்டா விவசாயிகளுக்கு சோகம்
ADDED : ஜன 08, 2024 05:23 AM

காவிரி கடைமடை பாசன பகுதிகளில், மழை இல்லாததால், 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் காய்ந்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இடைவிடாது பெய்த மழையால், நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார் கோவில், கறம்பக்குடி, கந்தர்வகோட்டை ஆகியன காவிரியின் கடைமடை பாசன பகுதிகள்.
இங்கு, 30,000 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யாததால், காவிரி பாசனம் பெறும் பகுதிகள், மேட்டூர் அணை நீர் நிறுத்தப்பட்டதால், பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 'அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் பகுதிகளுக்கு, கல்லணை கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும். மேட்டூரில் ஓரளவு இருக்கும் தண்ணீரை திறந்து விட்டு, கல்லணை கால்வாயின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கினால் நெற்பயிர்களை காப்பாற்றலாம். இல்லாவிட்டால், பாதிப்பை தவிர்க்கவே இயலாது' என்றனர்.
தண்ணீர் இன்றி புதுகையில் பயிர்கள் காயும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், இடைவிடாது பெய்த மழையால், பயிர்கள் சாய்ந்துள்ளன.
நேற்று முன்தினம் முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆழ்துளை கிணறு வாயிலாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், மழையால் பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன.
மழை நீடித்தால் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
- நமது நிருபர் குழு -